நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எதிரொலி: பிப்., 19ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் ரத்து..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 12 Feb 2022 10:31 AM IST (Updated: 12 Feb 2022 10:37 AM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால் அடுத்த சனிக்கிழமை (பிப்.19) தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை, 

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. 

அதன்மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தற்போது வரை 21 மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தில் நடந்துள்ளது. இந்த நிலையில் 22-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் இன்று நடைபெற்று வருகிறது.

இதனிடையே தமிழகத்தில் தற்போது வாரந்தோறும் சனிக்கிழமையன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்நிலையில்  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால் வரும் சனிக்கிழமை (பிப்.19) த23வது தடுப்பூசி முகாம் நடத்த இயலாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் 2,792 ஊராட்சி, 24 நகராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பிப். 19-ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், 23வது தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story