தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதி: பெண்களுக்கு விரைவில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் - கனிமொழி எம்.பி. உறுதி


தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதி: பெண்களுக்கு விரைவில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் - கனிமொழி எம்.பி. உறுதி
x
தினத்தந்தி 13 Feb 2022 6:37 AM IST (Updated: 13 Feb 2022 6:37 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல பெண்களுக்கு விரைவில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என பிரசாரத்தின்போது கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

சென்னை,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர், சென்னை மயிலாப்பூர், விருகம்பாக்கம், ராயபுரம், திருவொற்றியூர், எழும்பூர் ஆகிய இடங்களில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். ராயபுரம் மேற்கு பகுதிக்குட்பட்ட மூலக்கொத்தளம் அழகிரி திடலில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

இந்த வார்டில் போட்டியிடும் வேட்பாளர் உங்களுக்கு புதியவர் இல்லை. எப்போதும் உங்களுடன் இருந்து, உங்களுக்காக பணியாற்றக்கூடியவர். இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் இன்னும் சிறப்பாக முதல்-அமைச்சரின் நல்ல திட்டங்களை எல்லாம் உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பார். நாடாளுமன்றத்தில் மற்ற மாநில எம்.பி.க்கள் எங்களிடம், இத்தனை நல்ல விஷயங்களை உங்களால் தமிழகத்தில் எப்படி செய்ய முடிகிறது?. எதுவாக இருந்தாலும், உங்களது முதல்-அமைச்சர் எப்படி துணிச்சலாக குரல் கொடுக்கிறார்? என்று கேட்கக்கூடிய அளவுக்கு பெருமை பெற்றிருக்கக்கூடிய ஆட்சியை முதல்-அமைச்சர் நடத்தி கொண்டிருக்கிறார்.

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க.வில் அனைவரும், திடீரென தேர்தல் நேரத்தில் வந்து, தி.மு.க. ஆட்சிக்கு வந்து என்ன செய்தது? என்று கேட்கிறார்கள். ஆட்சிக்கு வந்து 9 மாதங்களில் மக்களின் கோரிக்கைகளையும், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றி உள்ளோம். அ.தி.மு.க. இதுவரை எதை நிறைவேற்றி இருக்கிறது. ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவச செல்போன், மானிய விலையில் பெண்களுக்கு ஆட்டோ என பல வாக்குறுதிகளை கொடுத்து எதையும் நிறைவேற்றவில்லை.

அவர்களின் கவனம் முழுவதும் கஜானாவை எப்படி காலி செய்வது என்பதில் தான் இருந்தது. ராயபுரம் பகுதியில் இருந்த முன்னாள் அமைச்சர், மீனவர்கள் பயன்படுத்தக்கூடிய ‘வாக்கி டாக்கி’ யில் கூட ஊழல் செய்திருக்கிறார். மக்களை பற்றி கவலைப்படாமல் கொரோனா காலக்கட்டத்தில் கிருமிநாசினி, முக கவசம் வாங்குவது உள்பட அனைத்திலும் ஊழல் செய்த ஆட்சிதான் அ.தி.மு.க. ஆட்சி.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு முதல்-அமைச்சர் ஸ்டாலின் மக்களை சந்தித்த போது, கொரோனா காலக்கட்டத்தில், அ.தி.மு.க. மக்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கூறினார். ஆனால், வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே அவர்கள் கொடுத்தார்கள். மீதி 4 ஆயிரம் ரூபாய் ஆட்சிக்கு வந்த பிறகு நாங்கள் கொடுக்கிறோம் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் கூறினார். அவர் கூறியபடியே ரூ.4 ஆயிரம் வழங்கினார். தொடர்ந்து, ஒவ்வொரு வாக்குறுதியையும் முதல்-அமைச்சர் நிறைவேற்றி வருகிறார். தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல விரைவில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் இந்த பகுதியில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தின்போது தி.மு.க. எம்.பி. கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ. ஐட்ரீம் ஆர்.மூர்த்தி உள்பட பலர் இருந்தனர்.

Next Story