யார் ஆட்சியில் நல்லது நடந்தது? மக்கள் எடைபோட்டு பார்த்து வாக்களிக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


யார் ஆட்சியில் நல்லது நடந்தது? மக்கள் எடைபோட்டு பார்த்து வாக்களிக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 14 Feb 2022 5:25 AM IST (Updated: 14 Feb 2022 5:25 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், யார் ஆட்சியில் நல்லது நடந்தது என்பதை மக்கள் எடைபோட்டு பார்த்து வாக்களிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

சென்னை, 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம், வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம், வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம் பகுதியில் போட்டியிடும் 37 வேட்பாளர்களை ஆதரித்து நேற்று சென்னை ராயபுரம் பழைய வண்ணாரப்பேட்டை ஜி.ஏ. சாலையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

அ.தி.மு.க.வில் ஒன்றரை கோடிக்கு மேலான தொண்டர்கள் இருக்கின்றனர். எந்த கொம்பாதி கொம்பனாலும் அசைக்கமுடியாத இயக்கமாக அ.தி.மு.க.வை உருக்கியவர் ஜெயலலிதா.

அமைதியான ஆட்சி

கடந்த 10 ஆண்டு காலமாக சிறப்பான, நிறைவான, அமைதியான ஆட்சியாக அ.தி.மு.க. ஆட்சி இருந்தது.

இந்த நேரத்தில் தி.மு.க.வினர் எப்போதும்போல நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசி, மக்களை நம்பவைத்து அதன் மூலமாக சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்கள். தற்போது, அவர்களால் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்ததும் முதலாவதாக நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்வோம் என்றனர். 30 வயதுக்குட்பட்ட மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்றனர். நகைக்கடன் ரத்து என்றனர். எதையாவது செய்தார்களா?

யார் ஆட்சியில் நல்லது நடந்தது?

இதுபோல எண்ணற்ற பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை நம்பவைத்து, இப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வசமாக தி.மு.க. சிக்கிக் கொண்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட அரிசி உள்ளிட்ட பொருட்கள் எல்லாம் பயன்படுத்த முடியாத வகையிலேயே இருந்தன.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் அனுமதி பெற்றுக்கொடுத்த ஆட்சி அ.தி.மு.க. ஆட்சிதான். இயற்கைச் சீற்றங்களின் போதும் மக்களுக்கு துணை நிற்கும் ஆட்சியாக அ.தி.மு.க. இருந்தது. வீட்டில் வரவு-செலவு கணக்கை பார்க்கும் நிதி அமைச்சராக இருப்பவர்கள் பெண்கள். பெண்களுக்கு தேர்தலில் 50 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்ததும் அ.தி.மு.க.தான். பெண்கள் நாட்டை முழுமையாக ஆளுகிற காலம் விரைவில் வரும். எனவே யார் ஆட்சியில் நல்லது நடந்தது என மக்கள் எடைபோட்டு பார்த்து வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தின்போது முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, வெங்கடேஷ்பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் ஆவடி மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திருமுல்லைவாயலில் பிரசாரம் மேற்கொண்டார். தொடர்ந்து திருவொற்றியூரில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

Next Story