“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்” - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்” என்று நெல்லையில் பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
நெல்லை,
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக மற்றும் பிரசார கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட செயலாளர்கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன், கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்குவதற்கு அடித்தளமாகவும், அச்சாரமாகவும் இருந்தது திருநெல்வேலி தான். அ.தி.மு.க. தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து உள்ளது. அப்போது மக்களுக்கு தேவையான ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம், படிக்கின்ற மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி மற்றும் கல்வி உபகரணங்கள், இலவச கல்வி ஆகியவை வழங்கப்பட்டது. கல்விக்கு அதிக நிதி ஒதுக்கியதால் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பட்டதாரிகளின் எண்ணிக்கை 52 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் நிலை இருந்தது. ஆனால், தி.மு.க.வினர் பல பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை நம்ப வைத்து ஆட்சிக்கு வந்து விட்டனர். இன்னும் 4 வருடம் தி.மு.க. அரசால் துன்பம், துயரத்தை மக்கள் அனுபவிக்க வேண்டும் என்பதை மறைமுகமாக அவர் கூறி சென்றுவிட்டார்.
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தான் தி.மு.க. அரசு தற்போது நிறைவேற்றி வருகிறது. புதிதாக எந்த திட்டங்களையும் அவர்கள் கொண்டு வரவில்லை. தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அவர்கள் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். இந்த தேர்தலில் தொண்டர்கள் தான் நிற்கிறார்கள். அவர்களை வெற்றி பெற செய்ய அனைவரும் பாடுபட வேண்டும்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
Related Tags :
Next Story