முதல்-அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை ஒவ்வொரு நாளும் செய்து கொண்டிருக்கிறார் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியை ஒவ்வொரு நாளும் செய்து கொண்டிருக்கிறார் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சேலம்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் சந்தைப்பேட்டை பகுதியில் இன்று காலை தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
சேலத்துக்கு நாங்கள் எப்போது வந்தாலும் இதே எழுச்சி தான். இதே வரவேற்பு தான். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு வரும்போதும், இதே அளவுக்கு எழுச்சியோடு வரவேற்பு கொடுத்தீங்க. தி.மு.க. வேட்பாளர்களை எல்லாம் வெற்றிப் பெற வைப்போம் என தெரிவித்தீர்கள். 11 சட்டமன்ற தொகுதிகளில் எத்தனை தொகுதியில் வெற்றி பெற்றோம். இது நியாமா?. இந்த தவறை மீண்டும் செய்வீர்களா?.
ஒட்டு மொத்த தமிழகத்திலும் தி.மு.க.வை நம்முடைய தலைவர் வெற்றி பெற வைத்தார்கள். நம்முடைய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
உங்களுக்கு தெரியும் தி.மு.க. ஆட்சி அமைந்து 9 மாதங்கள் ஆகிறது. சொல்வதை செய்வோம். செய்வதை சொல்வோம் என செய்து காட்டியவர் தலைவர் கலைஞர். அவருடைய வழியில் வந்த நம்முடைய தலைவரும் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி ஒவ்வொன்றையும் நிறைவேற்றி வருகிறார்.
அ.தி.மு.க. ஆட்சியில் அரசு கஜானாவை முழுவதுமாக காலி பண்ணீட்டாங்க. 5.75 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்து விட்டு போயிருக்காங்க. இருந்தாலும் தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியை ஒவ்வொரு நாளும் செய்து கொண்டிருக்கின்றார்.
கொரோனா நிவாரண தொகை ரூ.4 ஆயிரம், அதேபோல் பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3-ம், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3-ம் குறைத்து இருக்கிறார். பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை விரைவில் வழங்கப்படும் என்ற உறுதி மொழியும் தலைவர் கொடுத்து இருக்கிறார். கண்டிப்பாக தலைவர் சொன்னதை செய்வார்.
தி.மு.க.வின் ஒவ்வொரு திட்டங்களையும் மக்களிடத்தில் எடுத்து சொல்லி தி.மு.க.வினர் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்க வேண்டும். உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடர தி.மு.க.வுக்கு வாக்களிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story