சாலைகள் அமைத்ததில் ஊழல் எடப்பாடி பழனிசாமி சிறைக்கு போய் கம்பி எண்ணும் சூழ்நிலை வரும் - உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு


சாலைகள் அமைத்ததில் ஊழல் எடப்பாடி பழனிசாமி சிறைக்கு போய் கம்பி எண்ணும் சூழ்நிலை வரும் - உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
x

சாலைகள் அமைத்ததில் ஊழல் நடந்திருப்பதாகவும், இதனால் எடப்பாடி பழனிசாமி சிறைக்கு போய் கம்பி எண்ணும் சூழ்நிலை வரும் என்று தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

சேலம், 

சேலம் மாவட்டம் ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகளில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நேற்று ஆத்தூர் ராணிப்பேட்டையில் பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது:-

சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. தலைவர் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வீடுகளே இல்லாத பகுதிகளுக்கு தார்சாலை அமைத்து கொடுத்ததில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது நண்பர் இளங்கோவன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து அவர்கள் ஜெயிலுக்குள் போய் கம்பி எண்ணுகிற சூழ்நிலை வரும்.

உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடர தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

இதேபோல் ஆட்டையாம்பட்டி மற்றும் சங்ககிரியில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மாலை தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசும்போது, சட்டசபை தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுத்து ஆட்சி நடத்தி வருகிறோம். எடப்பாடி பழனிசாமி மாதிரி சசிகலா காலில் விழுந்து முதல்-அமைச்சர் ஆகவில்லை. சேலம் மாவட்டத்தில் சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியை தவிர மற்ற தொகுதிகளில் தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டது. எனவே, நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்’ என்றார்.

இதேபோல சேலம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தாதகாப்பட்டி கேட், கோட்டை பகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Next Story