டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலமே மாமல்லபுர புராதன சின்னங்களை கண்டு ரசிக்க அனுமதி
டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலமே புராதன சின்னங்களை கண்டு ரசிக்க அனுமதி என்பதால் மாமல்லபுரத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மாமல்லபுரம் புராதன சின்னம்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பிரசித்தி பெற்ற கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல், புலிக்குகை உள்ளிட்ட பல்வேறு புராதன சின்னங்கள் உள்ளன. தமிழர்களின் கட்டிட கலைக்கு சான்றாக விளங்கும் இவை அனைத்தும் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நினைவு சின்னங்களாக கலங்கரை விளக்கம்போல ஒளி வீசிக்கொண்டு இருக்கின்றன.
கல்லில் கலைநயம் கண்ட தமிழர்களின் கை தேர்ந்த கலையை பார்வையிடுவதற்காக மாமல்லபுரத்துக்கு வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுளில் இருந்தும் தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்தியாவை பொறுத்தமட்டில் தாஜ்மகாலுக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமாக மாமல்லபுரம் கடற்கரை கோவில் திகழ்ந்து வருகிறது.
சுற்றுலாவாசிகள் அதிர்ச்சி
தொல்லியல் துறையின் பார்வையாளர் நுழைவு கட்டண வருவாய் அடிப்படையில் இந்திய அளவில் தாஜ்மகால் முதல் இடத்திலும், மாமல்லபுரம் கடற்கரை கோவில் 2-வது இடத்திலும் உள்ளதாக கூறப்படுகிறது. மாமல்லபுரம் புராதன சின்னத்தை பார்வையிடுவதற்கான நுழைவு கட்டணமும் டிஜிட்டல் முறையிலேயே பெறப்பட்டு வருகிறது. சாளுவன்குப்பம் பகுதியில் உள்ள புலிக்குகை மற்றும் 2 புராதன சின்னங்களை பார்வையிடுவதற்கு இந்திய பார்வையாளர்களுக்கு தலா ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதற்கான நுழைவு கட்டணத்தை செலுத்துவதற்கு நுழைவு வாயிலில் ‘ஸ்கேன்' ‘கோடு' (குறியீடு) வைக்கப்பட்டு உள்ளது. அதில் ‘ஸ்கேன்' செய்து ‘கூகுள் பே' என்ற ‘ஜி பே' மூலமாக மட்டுமே பணம் பெறப்படுகிறது. ரொக்கமாக பணம் செலுத்த விரும்பினால் நுழைவுச்சீட்டு கொடுக்கப்படுவது இல்லை. இதனால் சுற்றுலாவாசிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். பார்க்காமலேயே திரும்பி சென்றுவிடுகிறார்கள்.
சாத்தியம் இல்லை
இனிமேல் மாமல்லபுரம் போன்ற இடங்களுக்கு சுற்றுலா வந்தால், வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும். அவ்வாறு வங்கி கணக்கு இருந்தாலும் அதில் போதுமான அளவுக்கு பணம் இருக்க வேண்டும். பணம் இருந்தாலும் போதாது, கையில் ‘ஆன்டிராய்டு' செல்போன் இருக்கவேண்டும். ‘ஆன்டிராய்டு' செல்போன் இருந்தாலும், அந்த நேரத்தில் கட்டணம் செலுத்துவதற்கான ‘கோடை' ஸ்கேன் செய்து பணம் செலுத்த செல்போன் ‘நெட்வொர்க்' சரியான முறையில் ஒத்துழைக்க வேண்டும். இவை எல்லாம் கை கொடுத்தால் மட்டுமே நுழைவு கட்டணம் செலுத்தி, புராதன சின்னங்களை பார்வையிட முடியும் என்ற நிலை இருக்கிறது.
இந்த சங்கிலியில் ஏதாவது ஒரு சிக்கல் ஏற்பட்டாலும், புராதன சின்னங்களை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடனே மனம் உடைந்து திரும்ப வேண்டும் என்ற சூழல் உள்ளது. வளர்ந்த நாடுகளில் இதுபோன்ற நடைமுறை சாத்தியமாகும். ஆனால் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு இப்போதைக்கு இது சாத்தியம் இல்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.
சரியான முறை அல்ல
புராதன சின்னங்களை பார்வையிட வருபவர்கள் அனைவரிடத்திலும் வங்கி கணக்கு இருப்பது என்பதும், ‘ஆன்டிராய்டு' செல்போன் வைத்திருப்பது என்பதும் சாத்தியம் இல்லாத ஒன்று. இதனால் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுவது என்பது சரியான முறை அல்ல என்று சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள். ரொக்க பணம் பெற்றுக்கொண்டு பார்வையாளர்களுக்கு நுழைவுச்சீட்டை வழங்க வேண்டும் என்பது அவர்களின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.
இதேபோல தமிழ் தெரியாத பிற மாநிலங்களை சேர்ந்த குறிப்பாக வட மாநிலங்களை சேர்ந்த பாதுகாவலர்கள் அங்கு நிறுத்தப்பட்டு உள்ளனர். அவர்களிடம் ஒரு சந்தேகம் என்றாலும் கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ள முடியாத நிலையே தமிழர்களுக்கு இருக்கிறது. எனவே புராதன சின்னங்களை பார்வையிடுவதற்கான நுழைவுச்சீட்டை ரொக்க பணம் பெற்றுக்கொண்டு தொல்லியல் துறை வழங்க வேண்டும். மேலும் தமிழ் தெரிந்தவர்களை அங்கு பணிக்கு அமர்த்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் குரலாக ஒலிக்கிறது.
Related Tags :
Next Story