நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல்: மக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம்- மாநில தேர்தல் ஆணையர் பேட்டி
நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் நாளை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.
சென்னை,
நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் நாளை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறும்போது,
"தமிழகத்தில் நாளை காலை 7 மணிக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடியே 83 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். மக்கள் வாக்களிப்பதற்காக மொத்தம் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கை பேணிக்காக சுமார் 1 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே மக்கள் அச்சமின்றி வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கலாம்.
வாக்கு இயந்திரங்களை பாதுகாக்கும் அறைக்கு உள்ளேயும், வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 5,960 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளை வெப் ஸ்ட்ரீம் முறையில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 3 பேர் உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 41 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம். தற்போதுவரை 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்". இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story