தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; காலை 7 மணி முதல் வாக்களிக்கலாம்


தமிழகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; காலை 7 மணி முதல் வாக்களிக்கலாம்
x
தினத்தந்தி 19 Feb 2022 5:47 AM IST (Updated: 19 Feb 2022 7:01 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

30 ஆயிரம் வாக்குச்சாவடிகள்

மாநகராட்சி பகுதியில் 1,369 வார்டுகள், நகராட்சி பகுதியில் 3,824 வார்டுகள், பேரூராட்சி பகுதியில் 7,408 வார்டுகள் என மொத்தம் 12,601 வார்டுகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

இதற்காக மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இறுதிக்கட்ட பயிற்சி

சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளை பொறுத்தமட்டில் 1,400 ஓட்டுகளுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அடிப்படையிலும், இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளை பொறுத்தமட்டில் 1200 ஓட்டுகளுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அடிப்படையிலும் வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவில் ஈடுபட உள்ள 1 லட்சத்து 33 ஆயிரம் பணியாளர்களுக்கு நேற்று இறுதிக்கட்ட பயிற்சி நடைபெற்றது. நேற்று மதியம் 1 மணி வரை இந்த பயிற்சி நடந்தது.

ஒரு வாக்குச்சாவடிக்கு 4 வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். பயிற்சிக்கு பின்பு, பணி ஆணையை பெற்றுக்கொண்ட அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

தயார்நிலையில் வாக்குச்சாவடிகள்

வாக்குப்பதிவுக்கு 1 லட்சத்து 6 ஆயிரம் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மின்னணு எந்திரங்கள் அனைத்தும் நேற்று பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

வாக்காளர் பட்டியல், அழியாத அடையாள மை, எழுதுபொருட்கள் என வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டுவரப்பட்டன.

தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் நேற்று மாலை வாக்குச்சாவடிக்கு வந்தனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு அலுவலர்கள் அமருவதற்கும், வேட்பாளர்களின் முகவர்கள் அமருவதற்கும் இடம் ஒதுக்கப்பட்டு அங்கே மேஜை, நாற்காலி போடப்பட்டு தயார்நிலையில் இருந்தது.

சக்கர நாற்காலி

மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்காக சக்கர நாற்காலிகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலுக்கு மத்தியில் தேர்தல் நடைபெறுவதால் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி, வாக்காளர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வெப்பமானி (தெர்மல் ஸ்கேனர்) மற்றும் கிருமி நாசினி, முககவசம், கை உறைகள் போன்றவை தயாராக உள்ளன.

தேர்தல் அதிகாரி தலைமையில் நேற்று இரவு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பொருத்தப்பட்டு சரிபார்க்கப்பட்டன.

பந்தல்-குடிநீர் வசதி

பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் சாமியானா பந்தல் போடப்பட்டுள்ளது. குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நேற்று இரவே மேற்கொள்ளப்பட்டது.

மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்குப்பதிவு அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திலேயே தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதன்படி, வாக்குப்பதிவு அலுவலர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் தங்கினர்.

எல்லைக்கோடு

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்களின் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தூரத்துக்குள் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க எல்லைக்கோடு வரையப்பட்டுள்ளது.

இந்த எல்லைக்கோட்டுக்கு அப்பால் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் பூத் சிலிப் வழங்குவதை உறுதி செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் ஆகியவற்றுடன் கூடிய போஸ்டர்கள் வாக்காளர்களுக்கு தெரியும் வகையில் வாக்குச்சாவடி முன்பு ஒட்டப்பட்டுள்ளன.

கட்டுப்பாட்டு அறை

இணையதள வசதி உள்ள வாக்குச்சாவடிகளில் ‘வெப் ஸ்டீரிமிங்' எனப்படும் இணையதள கண்காணிப்பு மூலம் வாக்குப்பதிவை கண்காணிக்க மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, இணையதள கண்காணிப்பு வசதி உள்ள வாக்குப்பதிவு மையங்களில் நடைபெறும் வாக்குப்பதிவை மாநில தேர்தல் ஆணையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து பார்வையிடுகின்றனர்.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா மற்றும் நுண் பார்வையாளர்கள் மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகிறது.

சிறப்பு ஏற்பாடு

மாநிலம் முழுவதும் 5,960 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 13 ஆயிரத்து 73 போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு நேற்று இரவு வந்தனர்.

மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைகிறது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘டோக்கன்’ வழங்கி வாக்குப்பதிவு

இந்த தேர்தலில் சுமார் 2½ கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனாவால் பாதித்தவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இதர வாக்காளர்கள் மாலை 5 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்து விட வேண்டும் என வாக்காளர்களை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. மாலை 5 மணிக்கு வாக்காளர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் வரிசையில் நிற்கும் அனைவருக்கும் டோக்கன் வழங்கி அவர்கள் வாக்களிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு அந்தந்த வார்டுகளுக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகின்றன.

வருகிற 22-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.


Next Story