மதுரை மேலூர் ஹிஜாப் விவகாரம்: பாஜக முகவர் கைது
மதுரை மேலூரில் பெண் வாக்களிடம் ஹிஜாப்பை அகற்றச்சொன்ன பாஜக முகவர் கைதுசெய்யப்பட்டார்.
மேலூர்,
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி தேர்தலில் 8-வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்கு சாவடியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெண்ணின் ஹிஜாப்பை அகற்ற சொல்லி பாஜக முகவர் கிரிராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
பெண் வாக்களிடம் பாஜக முகவர் ஹிஜாப்பை அகற்றச்சொன்னதால் திமுக, அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சி முகவர்கள் மற்றும் அதிகாரிகள் வாக்குபதிவு மையத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
சிறிதுநேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முகவர் கிரிராஜன் வாக்குப்பதிவு மையத்திலிருந்து அப்புறபடுத்தியதை அடுத்து வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது. அங்கு போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக, இந்த விவகாரம் குறித்து ஆட்சியர் அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் அறிவித்தார். இந்த நிலையில், ஹிஜாப் அணிந்துவந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட பாஜக முகவர் கிரிராஜன் மீது அரசு ஊழியர்களை பணிசெய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.
Related Tags :
Next Story