சென்னையில் வாக்குப்பதிவு குறைந்ததற்கான காரணம் என்ன?
சென்னையில் வாக்குப்பதிவு குறைந்ததற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாக்குப்பதிவு மந்தம்
பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நடந்தது. 5 ஆயிரத்து 794 மையங்களில் நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில் 61 லட்சத்து 73 ஆயிரத்து 112 வாக்காளர்களில் 26 லட்சத்து 94 ஆயிரத்து 785 பேர் மட்டுமே தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இது 43.65 சதவீதம் ஆகும்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் வடசென்னையில் 1 முதல் 63 வார்டுகளாகவும், மத்திய சென்னை 64 முதல் 142 வார்டு வரையும், தென் சென்னை 142 முதல் 200-வது வார்டு வரையும் இருந்து வருகிறது. இதில் பாமர மக்கள் அதிகம் வாழக்கூடிய வடசென்னையின் 61 வார்டுகளில் 40 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். வடசென்னையில் 10 வார்டுகளில் மட்டுமே 60 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக மணலி மண்டலத்தில் உள்ள 17-வது வார்டில் 84.58 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
பணக்காரர்கள்...
இதைப்போல் பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் மத்திய சென்னையில் 60 சதவீத்துக்கு மேல் எந்த வார்டுகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. மத்திய சென்னைக்கு உட்பட்ட வார்டுகளில் அதிகபட்சமாக 86-வது வார்டில் 50.14 சதவீதத்தினர் வாக்களித்துள்ளனர். மத்திய சென்னையில் இந்த ஒரு வார்டில் மட்டும் தான் 50 சதவீதத்தினர் வாக்களித்துள்ளனர் என்பதும், சென்னையில் குறைவான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது மத்திய சென்னையின் 133-வது வார்டும் (31.01) என்பதும் வருத்தமான தகவலாகும்.
தென் சென்னையில் 50 சதவீதத்துக்கு மேல் 15 வார்டுகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக 197-வது வார்டில் 64.11 சதவீதத்தினரும், குறைந்தபட்சமாக 171-வது வார்டில் 33.44 சதவீதத்தினரும் வாக்களித்துள்ளனர். தென் சென்னையில் 40 சதவீதத்துக்கும் மேல் 27 வார்டுகளில் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் மத்திய சென்னையில் தான் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளது. இதன்மூலம் மத்திய சென்னையில் பலர் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வரவில்லை என தெரிகிறது.
வாக்காளர்களுக்கு ஏற்பட்ட குழப்பம்
கூட்டமான இடங்களில் கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் இணை நோய்கள் உள்ள பலரை அவர்களது டாக்டர்கள் வாக்குச்சாவடியில் கூட்டம் இருக்கும் எனவே வாக்குப்பதிவு செய்ய செல்லவேண்டாம் என அறிவுறுத்தியதாகவும் பொதுமக்கள் பலர் தெரிவித்தனர். இதனால் பெரும்பாலானோர் உள்ளாட்சி தேர்தல் தானே என வாக்களிக்கவில்லை என கூறப்படுகிறது.
சென்னையில் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கொரோனா காலம் என்பதால் வாக்குச்சாவடிகளை அதிகரித்திருந்தனர். ஆனால் தற்போது சென்னை மாநகராட்சி தேர்தலில் வாக்குச்சாவடிகள் குறைக்கப்படிருந்தன. இதனால் பல மக்கள் தங்கள் சட்டமன்ற தேர்தலின்போது வாக்களித்த வாக்குச்சாவடிகளுக்கு சென்று அங்கு வாக்களிக்க இயலாததால் திரும்பியுள்ளனர்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வீடு வீடாக சென்று ‘பூத் சிலிப்’ வழங்கியபோதும் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நேரம் குறைவு
பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலில் வாக்குப்பதிவுகள் மந்தமானதுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. இருந்தபோதிலும் மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது ஒரு முக்கிய காரணம். வழக்கமாக தேர்தலில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதனால் பல தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கவில்லை என்றாலும், மாலை வேலை முடிந்தவுடன் வாக்குகளை பொதுமக்கள் பதிவு செய்தனர்.
இந்த தேர்தலில் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. இதனால் விடுமுறை அளிக்காத தனியார் நிறுவன ஊழியர்கள் பலரால் வாக்குப்பதிவு செய்ய இயலவில்லை. தொடர்ந்து பல வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடிகள் தெரியாமல் தவறான வாக்குச்சாவடிகள் சென்று வாக்களிக்க முயன்றதும் ஒரு முக்கிய காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story