நீட் தேர்வு, மின்துறை தனியார் மயம் பிரச்சினையை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
புதுவை சட்டசபை நாளை கூடுகிறது. இந்த கூட்டத்தில் நீட் தேர்வு விலக்கு மசோதா, மின்துறை தனியார் மயம் குறித்த பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
புதுவை சட்டசபை நாளை கூடுகிறது. இந்த கூட்டத்தில் நீட் தேர்வு விலக்கு மசோதா, மின்துறை தனியார் மயம் குறித்த பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
சட்டசபை கூடுகிறது
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி அரசு கடந்த ஆண்டு பதவியேற்ற நிலையில் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்டு 26-ந்தேதி முதல் செப்டம்பர் 3-ந்தேதி வரை நடந்தது. அப்போது முழுமையான பட்ஜெட்டை முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.
இந்தநிலையில் 6 மாதங்களுக்கு ஒருமுறை சட்டசபை கூட்டப்பட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் வருகிற மார்ச் மாதம் 2-ந்தேதிக்குள் சட்டசபை கூட்டப்பட வேண்டும். இதன்படி நாளை (புதன்கிழமை) சட்டசபை கூடுகிறது.
ஒரு வாரத்துக்கு மேல்...
இந்த கூட்டத்தின்போது மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. கூட்டத்தை ஒரே நாளிலேயே முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. கூட்டத்தை ஒரு வாரத்துக்கும் மேல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை சந்தித்து கோரிக்கை மனுவினையும் அளித்துள்ளனர்.
நீட் விலக்கு மசோதா
அதிலும் குறிப்பாக நீட் தேர்வு விலக்கு மசோதா, மின்துறை தனியார் மயம், பெஸ்ட் புதுச்சேரி திட்டம், கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட நிதியே இந்த ஆண்டும் மத்திய அரசால் வழங்கப்பட்டது உள்ளிட்ட மத்திய அரசு தொடர்புடையவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
ஆனால் இவை குறித்து எல்லாம் விவாதத்துக்கு அனுமதிக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அனுமதி அளிக்காவிட்டாலும் தி.மு.க.வினர் மத்திய அரசு குறித்து கடுமையான விவாதத்தில் ஈடுபடுவார்கள் என்று தெரிகிறது. அவர்களுக்கு ஆதரவாக கூட்டணி கட்சியான காங்கிரசும் குரல் கொடுக்கும்.
முழு பட்ஜெட்
எனவே எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை எதிர்கொள்ள என்.ஆர்.காங்கிரசும், பா.ஜ.க.வும் தயாராகி வருகிறது. எனவே ஒருநாள் நடந்தாலும் இந்த கூட்டத்தின்போது பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்று தெரிகிறது.
இதனிடையே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதுவை மாநிலத்தில் மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட்டே சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமி தயார் ஆகி வருகிறார்.
40 சதவீத நிதி
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் சுமார் 40 சதவீத நிதியே பல்வேறு துறைகளில் செலவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே மீதமுள்ள நிதியை விரைந்து செலவிடவும் அரசுத்துறைகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தி உள்ளார்.
இதற்கிடையே சட்டசபை நாளை நடைபெறுவதையொட்டி சபாநாயகர் செல்வம், சட்டசபை செயலாளர் முனுசாமி ஆகியோர் கூட்டம் நடைபெறும் அரங்கை ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story