நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்துவிட்டனர் கமல்ஹாசன் பேட்டி


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்துவிட்டனர் கமல்ஹாசன் பேட்டி
x
தினத்தந்தி 22 Feb 2022 12:35 AM IST (Updated: 22 Feb 2022 12:35 AM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்துவிட்டனர் என்று கமல்ஹாசன் கூறினார்.

சென்னை,

இதுகுறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமைச்செயலாளர் இறையன்புவிடம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

“அதிகாரப் பரவலாக்கல்” என்பதன் மூலமே சிறந்த நிர்வாகத்தை அரசு தரமுடியும். கிராம சுயாட்சிக்கு கிராம சபைகள் வழிவகுக்கின்றன. நகர்ப்புறங்களிலும் கிராம சபைகள் போன்ற மக்கள் பங்கேற்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டு, அவை விரைவில் செயல்பாட்டுக்கு வரவேண்டும்.

நகர்ப்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள், குடியிருப்போர் நலச் சங்கம் அமைத்து தங்களது தேவைகளை தீர்க்கும் ஒரு பங்கேற்பு ஜனநாயகத்தை உருவாக்கி வைத்திருக்கின்றனர். தேவைக்கேற்ப தீர்மானங்கள் இயற்றி செயல்படுத்துகிறார்கள். இது ஒரு தனியார் அமைப்பில் உள்ள பங்கேற்பு ஜனநாயகம்.

உள்ளாட்சி நிர்வாகத்தில் இதைவிடச் சிறந்த மக்கள் பங்கேற்பு ஜனநாயகம் மலர வேண்டும். கிராம சபைகளை போலவே நகரங்களிலும் பங்கேற்பு ஜனநாயகத்தை உருவாக்குவதற்காக, 2010-ம் ஆண்டில் தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் (திருத்தம்) சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில், மக்கள் பங்கேற்புடைய “ஏரியா சபை” மற்றும் “வார்டு கமிட்டி” ஆகிய அமைப்புகளை உருவாக்க வழிவகை செய்கிறது.

மக்கள் கருத்து

ஆனால் 11 ஆண்டுகளை கடந்தும் அந்த சட்டம் நடைமுறைக்கு வரவில்லை. அதற்கான செயல்முறை விதிகள் உருவாக்கப்படாததால், இன்றுவரை அமல்படுத்தப்படாமல் இருக்கிறது. தமிழகத்தில் சுமார் 50 சதவீதம் பேர், நகர உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் வாழ்கின்றனர். இவர்களுக்கு பங்கேற்பு ஜனநாயம் மறுக்கப்பட்டு வருகிறது.

இந்த சட்டத்தை மேலும் விரிவுபடுத்தி பேரூராட்சிப் பகுதிகளுக்கும் செயல்படுத்த தமிழக அரசு உரிய சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும். கேரளா மற்றும் கர்நாடகாவில் ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டிகள் செயல்பாட்டில் உள்ளன. அங்குள்ளதுபோல் நிதி ஒதுக்கீடு மற்றும் அதிகாரங்கள் ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டிகளுக்கு வழங்கப்படவேண்டும்.

இதன் மூலம் அந்தந்தப் பகுதி மக்கள் குடிநீர், பாதாள சாக்கடை, சாலை, குப்பை மேலாண்மை, போக்குவரத்து சீரமைப்பு, நீர்நிலை பாதுகாப்பு போன்ற முக்கிய அடிப்படைத் தேவைகளில் முன்னுரிமை கொடுத்து செயல்படுத்த முடியும். ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைப்புகளின் செயலாக்கம் குறித்து மக்களின் விரிவான கருத்துக்களைப் பெற தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நோட்டா இல்லை

பின்னர் தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களுக்கு கமல்ஹாசன் அளித்த பேட்டி வருமாறு:-

“ஏரியா சபை” மற்றும் “வார்டு கமிட்டி” போன்றவை நமக்கு எதற்கு? என்று நகர வாழ் மக்கள் ஒதுங்கிவிடக்கூடாது. ஏற்கனவே இதற்கான சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. இதுபோன்றவற்றில் சரிவர செயல்படாத அரசை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும் அல்லது செயல்பட வைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடும் மக்கள் சதவீதம் இங்கு குறைவாக காணப்படுகிறது. நமக்கெதற்கு என்று மக்கள் ஒதுங்கி இருக்கின்றனர். தேர்தலில் நோட்டா வாய்ப்பையும் எடுத்துவிட்டனர். அது இருந்தால்கூட சிலர் தங்களின் கருத்தை அதன் மூலம் சொல்வார்கள். மக்கள் விமர்சனம் கூடாது என்று அதை நீக்கியிருக்கின்றனர்.

மனசாட்சி முக்கியம்

அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை இல்லை என்பதால் பலர் வாக்களிக்கவில்லையா? என்று கேட்டால், அது 50 ஆண்டுகளாக வந்த சலிப்பு. வாக்களிக்கும்படி கமல்ஹாசன் சொல்லியே மக்கள் கேட்கவில்லையா? என்று கேட்டால், நான் யார்? அவர்கள் தூக்கி வைத்த ஆள்தான் நான். இதில் நான் சொல்லி அவர்கள் கேட்க வேண்டும் என்பதல்ல. அவரவர் மனசாட்சியைத்தான் கேட்க வேண்டும்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக ரீதியின்படி நடக்கவில்லை. ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்க மண்வெட்டியுடன் வந்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி 5-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதன் 5-வது ஆண்டு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியை கமல்ஹாசன் ஏற்றி வைத்து, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

Next Story