தேர்தல் முன்விரோதத்தில் வக்கீல் குத்திக்கொலை


தேர்தல் முன்விரோதத்தில் வக்கீல் குத்திக்கொலை
x
தினத்தந்தி 22 Feb 2022 2:15 AM IST (Updated: 22 Feb 2022 2:15 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் முன்விரோதத்தில் வக்கீல் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 36). வக்கீல். இந்நிலையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது அதே தெருவில் வசிக்கும் இலக்கியபிரபு என்பவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக அறிவழகன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இதற்கு அறிவழகனின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

குத்திக்கொலை

இந்நிலையில் நேற்று காலை அறிவழகன் தெருவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆயுதங்களுடன் ஆட்டோவில் வந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல், அறிவழகனை கத்தியால் குத்தியது.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அறிவழகனை காப்பாற்ற முயன்றபோது, அந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை காட்டி, பொதுமக்களை மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே அறிவழகன் துடிதுடித்து உயிரிழந்தார்.

இதையடுத்து அறிவழகனின் குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் திரண்டு, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி, உடையார்பாளையம் புறவழிச்சாலையில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே தடுப்புக் கட்டைகளை போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேர்தல் முன்விரோதம்

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தேர்தல் முன்விரோதத்தில் அறிவழகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்தது.

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story