முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்..!!


முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்..!!
x
தினத்தந்தி 22 Feb 2022 2:19 AM IST (Updated: 22 Feb 2022 5:37 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மார்ச் மாதம் 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கு கவுன்சிலர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டுப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் சில மையங்களில் கள்ளஓட்டு பிரச்சினை எழுந்தது. இதனால் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே பிரச்சினை எழுந்தது. ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட 49-வது வார்டு பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள காமராஜர் மெட்ரிக்குலேசன் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் கள்ளஓட்டு போடுவதாக, அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக அவர், அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் குறிப்பிட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்றார். அப்போது தி.மு.க. தொண்டர் நரேஷ்குமார் (வயது 33) என்பவரை ஜெயக்குமார் மற்றும் அ.தி.மு.க.வினர் பிடித்தனர். பின்னர் அவரது சட்டையை கழற்றி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. ஜெயக்குமாரும் தனது முகநூல் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்திருந்தார்.

இந்த நிலையில் நரேஷ்குமார், ஸ்டாலின் அரசு ஆஸ்பத்திரியில் உள் நோயாளியாக சேர்ந்தார். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜெயக்குமார் மற்றும் 40 பேர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், தமிழ்நாடு பொதுச்சொத்து சேதம் விளைவித்தல், பயங்கர ஆயுதங்கள் கொண்டு காயம் ஏற்படுத்தும் நடவடிக்கை உள்பட 15 சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டையார்ப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குமூலம் வருமாறு:-

நான் நரசய்யா தெருவில் துணிக்கடை வைத்து உள்ளேன். தேர்தல் அன்று மாலை 4.30 மணிக்கு வார்டு எண்.49-ல் காமராஜர் மெட்ரிக்குலேசன் பள்ளி சஞ்சீவிராய கோவில் தெருவில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் மிகவும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. நான் அங்கு சென்று தி.மு.க. தொண்டராக நின்று கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் எதிர்பாராத நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவரது வெள்ளை நிற காரில் அ.தி.மு.க. கட்சி கொடியுடன் வாக்குச்சாவடி மையத்துக்கு வந்தார். 20 மோட்டார் சைக்கிள்களில் 40 பேரும் அவருடன் வந்தனர். ஏ.டி.அரசு, சோமு, சந்திரன் மற்றும் லோகு ஆகியோருடன் வந்து வாக்குச்சாவடி மையத்துக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டனர்.

இதனை அங்கு நின்று கொண்டிருந்த நான் அவர்கள் அருகே சென்று ஏன் இவ்வளவு நபர்களுடன் வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைகிறீர்கள் என்று கேட்டேன். அப்போது ஜெயக்குமார் என்னை பார்த்து ஆபாச வார்த்தைகளை பேசினார். ஒரு முன்னாள் அமைச்சரையே கேள்வி கேட்கிறீயா, இவனை அடித்து சாவடிங்கடா என்று கூறினார். உடனே ஏ.டி.அரசு, என்னை எட்டி உதைத்தார். நான் நிலை தடுமாறி கீழே விழுந்தேன். அப்போது அவருடன் பார்த்தால் அடையாளம் காட்ட கூடியவர்கள் என்னை பலமாக தாக்கினார்கள். உயிர் பிழைத்தால் போதும் என்று அவர்களிடம் இருந்து தப்பி என் உயிரை காப்பாற்றி கொள்ள நான் ஓடினேன். அப்போதும் என்னை விடாமல் துரத்தி ஜெயக்குமார், ஏ.டி.அரசு, சோமு, சந்திரன், லோகு மற்றும் அவருடன் வந்த அனைவரும் விரட்டி பிடித்து என்னை மறுபடியும் பலமாக தாக்கி என்னை கொடுங்காயப்படுத்தினர்.

அது மட்டுமல்லாமல் என்னுடைய மேல் சட்டையை கழற்றி என் இரு கைகளையும் கட்டி கொலை குற்றவாளி போல என்னை அரை நிர்வாணப்படுத்தி இழுத்து வந்தனர். அதில் எனக்கு முதுகு தண்டுவடம், இடது கை மற்றும் வலது கை மோதிர விரலில் பலத்த காயம் ஏற்பட்டது.

அதுமட்டும் அல்லாமல் 2 கால்களும் பலத்த காயம் ஏற்பட்டது. வலி தாங்காமல் நான் மயங்கி கீழே விழுந்துவிட்டேன். என் அருகில் இருந்த நண்பர்கள் என்னை பத்திரமாக மீட்டு ஆட்டோவில் ஏற்றி அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து டாக்டரிடம் காண்பித்தனர். என்னை தாறுமாறாக அடித்த முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் தகவல் இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் ஜெயக்குமாரை, சென்னை பட்டினப்பாக்கத்தில் அவரது இல்லத்தில் வைத்து, வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் (பொறுப்பு) சுந்தரவதனம் தலைமையிலான 40 பேர் அடங்கிய போலீசார் நேற்று இரவு 8 மணியளவில் கைது செய்தனர். இதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் அவரை, லுங்கியுடன் போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமார், நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்படுவதாக தகவல் வெளியானது. இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையம் முன்பு நேற்று இரவு அ.தி.மு.க.வினர் கூடினர். ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் கட்சி தொண்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ஜெயவர்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இரவு 8.30 மணிக்கு குடும்பத்துடன் வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்தோம். அப்போது 30 போலீசார் வீட்டுக்குள் நுழைந்து, எனது தந்தையை கைது செய்ய ஆயத்தமானார்கள். ‘நான் ஒரு நிமிஷம் இருங்க சார்...’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, என்னை தள்ளிவிட்டு, சாப்பிட்டு கொண்டிருந்த எனது தந்தையிடம் ‘உடனே வாங்க... உங்களை கைது செய்யவேண்டும்’, என்றனர். நான் ‘எதற்கு...’ என்று கேட்டபோது, ‘‘அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. இப்போது உங்களை கைது செய்யவேண்டும்.’’, என்று கையோடு அவரை அழைத்து சென்றனர். அப்போது ‘ நானும் கூட வருகிறேன்’ என்று போலீசாரிடம் கேட்டேன். ஆனால் என்னை அப்படியே தள்ளிவிட்டு எனது தந்தையை கைது செய்து கூட்டிக்கொண்டு சென்றனர். நான் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்கிறேன். ஆனால் இப்போது வரை அவர் இங்கு வரவில்லை. எங்கிருக்கிறார்? என்றும் தெரியவில்லை. போலீசார் எனது தந்தையை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சுற்றிக்கொண்டு தான் இருக்கிறார்கள். எதற்காக கைது செய்தார்கள் என்று கூட எனக்கு தெரியவில்லை. எதிர்க்கட்சிகளை பழிவாங்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடனேயே செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

இந்தநிலையில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஜெயக்குமாரை குறிவைத்து கைது செய்திருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது.

கள்ள ஓட்டு போடுகிறவர்களை, கலவரம் செய்ய நினைப்பவர்களை கண்டிப்பது சகஜம் தான். அதற்கு துணை நிற்பது அனைவரது கடமை. எதிர்க்கட்சி என்ற முறையில் ஜெயக்குமார் அதை செய்தார். அவ்வளவு தான். ஜெயக்குமார் கைதுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் என்று அவர் கூறினார்.

தொடர்ந்து இரவு தாண்டியும் போராட்டம் நீடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதனிடையே கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 

இந்த சூழலில் மாஜிஸ்திரேட்டு முரளி கிருஷ்ணன் முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடந்தது. விசாரணைக்கு பிறகு, அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி அடுத்த மாதம் (மார்ச்) 7-ந்தேதி வரை அவர் நீதிமன்ற காவலில் இருப்பார். இதற்காக அவரை போலீசார் வேனில் பூந்தமல்லி சிறைக்கு அழைத்து சென்றனர். இதற்கிடையில் ஜெயக்குமார் தரப்பில் ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நாளை (புதன்கிழமை) விசாரணை நடைபெறும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஜெயக்குமார் தரப்பு வக்கீல் கூறும்போது, 'எங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தோம். ஜெயக்குமாரை வேனில் வைத்தபடியே தான் போலீசார் சுற்றி வந்திருக்கின்றனர். அதையும் அவரே நீதிமன்றத்தில் கூறியுள்ளார். 23-ந்தேதி(நாளை) ஜாமின் மீது விசாரணை நடக்கிறது. அதனை பொறுத்து அடுத்தக்கட்டமாக சட்டப்படி எங்கள் நடவடிக்கையை மேற்கொள்வோம்' என்றார்.

Next Story