“அ.தி.மு.க. விரைவில் தி.மு.க.வில் சங்கமம் ஆகிவிடும்” - அமைச்சர் ஐ.பெரியசாமி


“அ.தி.மு.க. விரைவில் தி.மு.க.வில் சங்கமம் ஆகிவிடும்” - அமைச்சர் ஐ.பெரியசாமி
x
தினத்தந்தி 23 Feb 2022 8:50 PM IST (Updated: 23 Feb 2022 8:50 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. விரைவில் தி.மு.க.வில் சங்கமம் ஆகி விடும் என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை,

தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. 

மொத்தம் உள்ள 138 நகராட்சிகளில் தி.மு.க. 132 இடங்களையும், அ.தி.மு.க. 3 இடங்களையும், மற்றவை 3 இடங்களையும் கைப்பற்றியது. இதேபோல் 489 பேரூராட்சிகளில் தி.மு.க. 435 இடங்களையும், அ.தி.மு.க. 15 இடங்களையும், பா.ஜனதா 5 இடங்களையும், மற்றவை 25 இடங்களையும் பிடித்தது. 

இந்த நிலையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பல இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், “ஒரு சில இடங்கள் மட்டுமல்ல, சுமார் 30 முதல் 40% இடங்கள் வரை அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. அதற்கு காரணம் அதிமுகவில் தலைமை இல்லை. அக்கட்சியில் உள்ள பெரும்பாலான தொண்டர்கள் தாய் கழகமான திமுகவில் இணைந்து வருகின்றனர். காலப்போக்கில் எல்லோரும் திமுகவில் இணைவார்கள். அதிமுகவும் திமுகவில் சங்கமம் ஆகிவிடும்” என்று தெரிவித்தார். 

Next Story