“உக்ரைனில் தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” - மத்திய வெளியுறவு மந்திரிக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்
உக்ரைனில் உள்ள தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய வெளியுறவு மந்திரிக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
மதுரை,
உக்ரைன் மீது ரஷியா இன்று போர் தொடுத்துள்ளது. ரஷிய படைகள் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஏவுகணை மழை பொழிந்துவருகின்றன. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருவதாகவும், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்க்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது;-
“மதுரையில் இருந்து உக்ரைன் சென்று படிக்கிற மாணவர்கள் நிறைய இருக்கிறார்கள். தமிழ்நாடு அளவில் எனும்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும். அவர்களின் பெற்றோர்கள் பதட்டத்தோடு என்னை தொடர்பு கொண்டு வருகிறார்கள்.
உக்ரைனில் போர்ச் சூழல் நிலவுகிறது என்றும் குண்டு வெடிப்புகள் பல பகுதிகளில் நடந்தேறி வருகிறது என்றும் செய்திகள் வருகின்றன. ட்விட்டரில் உக்ரைனுக்கான இந்திய தூதர் விடுத்துள்ள இந்த செய்தி அங்குள்ள கடுமையான சூழலை உறுதி செய்கிறது.
நிலைமை மிகப் பதட்டமாக உள்ளது. நிச்சயமற்றதாகவும் உள்ளது. இது பெரும் கவலைகளை உருவாக்கியுள்ளது. வான் வழி மூடப்பட்டு விட்டது. ரயில் அட்டவணைகள் கடைபிடிக்கப்படவில்லை. சாலைகள் கடும் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன.
இத்தகைய சூழலில் பல நாடுகள் தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பாக திரும்ப கொண்டு வந்து சேர்க்க ஏற்பாடுகள் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சகமும் உச்சபட்ச அளவிலான அரசு முறை தொடர்புகளின் மூலம் தமிழ் மாணவர்களின் பாதுகாப்பையும், அவர்களின் நாடு திரும்பலையும் உறுதி செய்ய உடனடி முயற்சிகளை செய்ய வேண்டும்.”
இவ்வாறு சு.வெங்கடேசன் தனது கடித்தத்தில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story