பிளாஸ்டிக் மீதான தடையை கொளத்தூர் தொகுதியில் முன்மாதிரியாக அமல்படுத்த வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


பிளாஸ்டிக் மீதான தடையை கொளத்தூர் தொகுதியில் முன்மாதிரியாக அமல்படுத்த வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 1 March 2022 12:20 AM IST (Updated: 1 March 2022 12:20 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை முதல்-அமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் முன்மாதிரியாக அமல்படுத்தி, அதுதொடர்பான அறிக்கையை 3 வாரங்களில் தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்து அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பிளாஸ்டிக் மீதான தடை செல்லும் என தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

அக்கறை இல்லையா?

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், “தமிழகத்தில் மட்டுமே பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த பிளாஸ்டிக் பொருட்கள் பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு கொண்டுவர எந்த தடையும் இல்லாமல் அனுமதிக்கப்படுகிறது” என்று வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள், “பிளாஸ்டிக் மீதான தடை உத்தரவை அமல்படுத்துவது என்றால், உற்பத்தி நிலையில் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலிருந்து கொண்டு வருவதையும் தடுக்க வேண்டும். ஒருவேளை இந்த தடை உத்தரவை அமல் படுத்த அரசுக்கு அக்கறையில்லை என்றால், தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் உற்பத்தியை மட்டும் ஏன் தடுக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினர்.

அரசு முடிவு

பின்னர், “பிளாஸ்டிக் பொருட்களை தடுப்பதா அல்லது ஊக்குவிப்பதா? என அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும். தடையை அமல்படுத்துவதாக இருந்தால், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

பெரும்பாலான கடைகளில் பொருட்களை எடுத்துச்செல்ல பிளாஸ்டிக் பைகள் இலவசமாக கொடுக்கப்படுகிறது. ஆனால் மாற்று பொருட்களால் ஆன பைகளுக்கு கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறது” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மஞ்சப்பை திட்டம்

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆகியவை இணைந்து பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ‘மஞ்சப்பை திட்டம்’ பெரிய அளவில் பொதுமக்களை சென்றடைந்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த மாநிலமாக தமிழகத்தை கொண்டு வருவதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழக அரசின் திடீர் ஆய்வுகள் மூலம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அமல்படுத்தவும் தயாராக உள்ளது” என்றார்.

சாத்தியமே

அப்போது நீதிபதிகள், “நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையான தடை உள்ளபோது, அதை தமிழ்நாடு முழுவதும் அரசு அமல்படுத்துவதில் சாத்தியம் உள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை முதல்-அமைச்சரின் கொளத்தூர் தொகுதியிலும், வில்லிவாக்கம், தாம்பரம் தொகுதிகளிலும் முன்மாதிரியாக அமல்படுத்தி, அதுதொடர்பான அறிக்கையை 3 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 24-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story