இலங்கை கடற்படை கைது செய்துள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் மோடிக்கு முதல்-அமைச்சர் கடிதம்


இலங்கை கடற்படை கைது செய்துள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் மோடிக்கு முதல்-அமைச்சர் கடிதம்
x
தினத்தந்தி 1 March 2022 3:31 AM IST (Updated: 1 March 2022 3:31 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படை கைது செய்துள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை,

இலங்கையில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாக இருப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீண்டும் மீண்டும் துன்புறுத்தப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் உங்களின் உடனடி கவனத்துக்கு கொண்டுவர விழைகிறேன். நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்கள் தங்களது எந்திர மீன்பிடி கப்பலில் கடந்த 24-ந்தேதி அதிகாலையில் பாக் வளைகுடா பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள மயிலாட்டி தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி, காரைக்கால் பகுதியை சேர்ந்த 13 மீனவர்கள் மற்றொரு மீன்பிடிப்படகில் மீன்பிடிக்க சென்றபோது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று, 26-ந்தேதி அன்று ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து எந்திரப்படகில் மீன்பிடிக்க சென்ற 8 மீனவர்கள் 27-ந்தேதி அன்று அதிகாலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கையில் உள்ள கிராஞ்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

நிரந்தர முடிவு

நமது மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் குறுகிய கால கட்டங்களில் தொடர்ந்து இதுபோன்று எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்தும். மீனவர்கள் துன்புறுத்தப்படும் நிகழ்வுகளும், கைது செய்யப்படும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன. தமிழ்நாடு அரசின் சார்பில் பலமுறை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ள போதிலும் இந்த நிலை தொடர்கிறது.

பாக் வளைகுடாவில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பறிக்கும் வகையிலான இலங்கை கடற்படையினரின் இத்தகைய நடவடிக்கைகள், ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் மூலம் நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

வெளியுறவு அமைச்சகத்துக்கு...

தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள் சிறைபிடிக்கப்படுவதும், மீனவ சமூகத்தினரிடையே மிகுந்த விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் நீங்கள் நேரடியாகத் தலையிட்டு, மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்கும் வகையில், இப்பிரச்சினையை இலங்கை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்ல ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story