ஜனநாயக பாதுகாப்புக்காக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் பினராயி விஜயன் பேச்சு


ஜனநாயக பாதுகாப்புக்காக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் பினராயி விஜயன் பேச்சு
x
தினத்தந்தி 1 March 2022 5:30 AM IST (Updated: 1 March 2022 5:30 AM IST)
t-max-icont-min-icon

‘‘ஜனநாயகத்தின் பாதுகாப்புக்காக அனைவரும் ஒன்று திரள வேண்டிய நேரம் இது’’ என கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசினார்.

சென்னை,

சென்னையில் நடந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுயசரிதை நூலான ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில், கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசியதாவது:-

ஒரு மலையாளியாக இங்கு வந்ததற்கு பெருமைப்படுகிறேன். மலையாளிகளும், தமிழர்களும் ஒரே மண்ணின் குழந்தைகள்தான். எனவே நாமெல்லாம் சகோதர-சகோதரிகளே. இந்த ஒற்றுமையை பலப்படுத்தும் முயற்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். எங்கள் மாநிலமும் அதில் மிக உறுதியாக இருக்கிறது. நான் உறுதிபட சொல்கிறேன், தமிழகத்துடன் சகோதரத்துவத்தை நாங்கள் பேணுவோம். அதுவே அனைவருக்கும் நல்லது.

தமிழகத்தில் நடைமுறையில் இருந்த பல தவறுகளை, பல இடர்பாடுகளை களைய வந்த இயக்கமே திராவிட இயக்கம். அந்த திராவிட இயக்கமே ஒரு நிலையான செயல்பாட்டை உருவாக்கியது. திராவிட அரசியலை தி.மு.க. முன்னெடுத்து செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஒன்று திரள வேண்டிய நேரம்

மேயர், அமைச்சர், துணை முதல்-அமைச்சர் என்ற பலநிலைகளை கடந்து இப்போது முதல்-அமைச்சராக நிற்கும் மு.க.ஸ்டாலின், பல்வேறு நிலைகளிலும் மக்களின் பிரதிபலிப்பாக இருந்திருக்கிறார். இதெல்லாமே, அவரது தந்தை கருணாநிதி காட்டிய வழி. மக்களின் நலனுக்காக காட்டிய வழி.

இந்தியா, பல நிலைகளில் பல வேற்றுமைகளை கொண்டிருக்கும் நாடு. கிராமியம், கூட்டாட்சி, மதசார்பின்மை, அரசியலமைப்பு என எத்தனை வேற்றுமைகள் இருந்தாலும், நாம் அனைவரும் ஜனநாயகத்தின் பாதுகாப்புக்காக ஒன்று திரள வேண்டிய நேரம் இது. குடிமக்களின் நலனுக்காக நாடு சுதந்திரபோக்கை கையாள வேண்டும். அந்த நிலைக்காக போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறோம். இதுவே அதற்கான காலம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தேஜஸ்வி யாதவ்

பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ள சமூகநீதி, நியாயம், நீதி, ஒற்றுமையை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. இங்கு ஒரு வித்தியாசமான சமூகத்தை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். அதை பார்த்து ரசிக்கிறேன்.

தமிழக மக்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு மாற்றங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். சமூக நீதிக்கு முன்னுரிமை அளித்து இந்த ஆட்சி செயல்பட்டு வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழகம் விளங்குகிறது.

சமூகநீதி

பல செயல்பாடுகளில் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழகம் விளங்குகிறது.

மு.க.ஸ்டாலினின் இந்த சுயசரிதை புத்தகத்தை அனைவரும் படிக்கவேண்டும். தமிழகத்தின் சமூக நீதிக்கான உயரிய அந்தஸ்தை பிரதிபலித்ததற்காக மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story