புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 12,838 வார்டு கவுன்சிலர்கள் நாளை பதவியேற்பு!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற 12,838 வார்டு கவுன்சிலர்கள் நாளை காலை பதவியேற்க உள்ளனர். இதைத்தொடர்ந்து மேயர், துணை மேயருக்கான மறைமுகத்தேர்தல் 4-ந்தேதி நடைபெறுகிறது.
சென்னை,
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19-ந்தேதி நடைபெற்றது.
12 ஆயிரத்து 838 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு அமைதியான முறையில் தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தி முடித்துள்ளது. மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் மொத்த இடங்களில் 4 வார்டுகளில் போட்டி இல்லாமல் தேர்வு செய்யப்பட்டனர்.
இதேபோல நகராட்சி வார்டுகளில் 3,843 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 18 வார்டுகளில் போட்டி இல்லாமல் தேர்வு செய்யப்பட்டனர். பேரூராட்சியில் மொத்தம் உள்ள 7,621 பதவிகளுக்கு 196 இடங்கள் போட்டியின்றி கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
7 வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இவை தவிர மற்ற அனைத்து இடங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. ஓட்டு எண்ணிக்கை கடந்த 24-ந்தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெற்றுள்ளது.
வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் நாளை காலை 9.30 மணிக்கு பதவி ஏற்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் கடந்த ஒருவாரமாக செய்து வந்தன.
தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்களுக்கு கமிஷனர்களும், பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர்களும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்கள். ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களும் தனித்தனியாக பதவிப் பிரமாண உறுதிமொழி ஏற்றுக்கொண்டு பொறுப்பேற்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து மேயர், துணை மேயருக்கான மறைமுகத்தேர்தல் 4-ந்தேதி நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு மேயர் தேர்தலும், பிற்பகல் 2.30 மணிக்கு துணை மேயர்களும் தேர்வு செய்யப்படுகிறார்கள். போட்டி இருப்பின் தேர்தல் நடைபெறும். போட்டி இல்லாத பட்சத்தில் ஒருமனதாக தேர்வுசெய்யப்படுவார்கள்.
Related Tags :
Next Story