500 பேருக்கு வழங்க திட்டம்: மானசரோவர், முக்திநாத் புனித யாத்திரைக்கு மானியம் தமிழக அரசு அறிவிப்பு


500 பேருக்கு வழங்க திட்டம்: மானசரோவர், முக்திநாத் புனித யாத்திரைக்கு மானியம் தமிழக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 2 March 2022 12:20 AM IST (Updated: 2 March 2022 12:20 AM IST)
t-max-icont-min-icon

மானசரோவர் மற்றும் முக்திநாத் புனித யாத்திரை மேற்கொண்டவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

சீனாவில் உள்ள மானசரோவர், நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு புனித யாத்திரையை முழுமையாக நிறைவு செய்த, தமிழகத்தை சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த ஆண்டு (2021) ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து வருகிற 31-ந்தேதி முடிய உள்ள காலங்களில் மானசரோவர் மற்றும் முக்திநாத் புனித யாத்திரையை நிறைவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். புனித யாத்திரைக்கான அரசு மானியம் வேண்டி (மார்ச் 1-ந்தேதி) நேற்று முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 30-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் பரிசீலனை

விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து சான்றுகளையும் பெற்று விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையின் இணைய தளமான www.tnhrce.gov.in பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள, உறுதி மொழிகளுடன் கூடிய விண்ணப்பப்படிவத்தை மட்டுமே பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.

அதன்படி விண்ணப்ப படிவத்தில் அனைத்து விவரங்களையும் எழுத்தால் முழுமையாக பூர்த்தி செய்து இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதற்கான சான்று உள்ளிட்ட படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சான்றுகளையும் வரிசைப்படி இணைத்து பக்க எண்ணிட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

500 பயனாளிகள்

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் உரிய முழுமையான ஆவணங்களுடன் ‘கமிஷனர், இந்து சமய அறநிலையத்துறை, எண்.119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-34’ என்ற முகவரிக்கு ஏப்ரல் 30-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அதற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தகுதி வாய்ந்த பயனாளிகள் அரசால் அமைக்கப்பட்ட தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படுவார். தேர்வு குழுவின் முடிவே இறுதியானதாகும்.

ஒவ்வொரு யாத்திரைக்கும் தகுதி வாய்ந்த பயனாளிகள் 500 பேருக்கு மேல் இருப்பின் பயனாளிகளின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் குறைந்த வருமானம் கொண்டவர்களிடம் இருந்து ஏறுமுகத்தில் தொடங்கி முதல் 500 பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். தேவையான கூடுதல் விவரங்களை இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளம் www.tnhrce.gov.in மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல்களை அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story