சபாநாயகர் அப்பாவு தொடர்ந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு


சபாநாயகர் அப்பாவு தொடர்ந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு
x
தினத்தந்தி 2 March 2022 3:03 AM IST (Updated: 2 March 2022 3:03 AM IST)
t-max-icont-min-icon

தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு கால்வாய் திட்டப்பணிகள் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு தொடர்ந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கை சென்னை ஐகோர்ட்டு முடித்துவைத்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு, கடந்த 2017-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடுஅரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

தாமிரபரணி ஆற்றில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 13 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலப்பதால், ராதாபுரம், திசையன்விளை, நாங்குநேரி, சாத்தான்குளம் பகுதிகளுக்கு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வருவதற்காக தாமிரபரணி- கருமேனியாறு -நம்பியாறுகளை இணைக்க 2006-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. 2011-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப்பிறகு திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

அவமதிப்பு வழக்கு

இதுதொடர்பாக நான் இந்த ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு விசாரணையின்போது, பணிகளை முடிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு அட்டவணையை தாக்கல் செய்தது. இதன்படி, பணிகளை முடிக்கும்படி 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டும், அந்த உத்தரவை அரசு முறையாக அமல்படுத்தவில்லை. எனவே, கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடித்துவைப்பு

அப்போது தமிழக அரசு தரப்பில், ‘‘இந்த திட்டம் 4 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. அதில், முதல் 2 கட்டங்கள் முடிவடைந்துள்ளது. 3-வது கட்டத்தில் 90 சதவீதமும், 4-வது கட்டத்தில் 50 சதவீதமும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும்’’ என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கோர்ட்டு அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Next Story