புலிகள் சரணாலய நெடுஞ்சாலையில் இரவு நேர போக்குவரத்து குறித்து திட்டம் வகுக்க வேண்டும்


புலிகள் சரணாலய நெடுஞ்சாலையில் இரவு நேர போக்குவரத்து குறித்து திட்டம் வகுக்க வேண்டும்
x
தினத்தந்தி 3 March 2022 2:32 AM IST (Updated: 3 March 2022 2:32 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் புலிகள் சரணாலய நெடுஞ்சாலையில் இரவு நேர போக்குவரத்து குறித்து திட்டம் வகுத்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

 சென்னை,

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் கோவை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் வனவிலங்குகள் வாகனத்தில் சிக்கி பலியாகின்றன.

அதையடுத்து, இரவு நேரத்தில் இந்த நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதித்த ஈரோடு கலெக்டரின் உத்தரவை தீவிரமாக அமல்படுத்தும்படி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த நெடுஞ்சாலையில் இரவு நேர போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

கடும் பாதிப்பு

அதை எதிர்த்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்குகள் எல்லாம் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், ‘இந்த நெடுஞ்சாலை தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இரு மாநிலங்களை இணைக்கும் இந்த சாலையை இரவு நேரத்தில் இதுபோல மூடினால் பெரும் பாதிப்பு ஏற்படும். அது மட்டுமல்லாமல் மருத்துவத்துக்காகவும், கல்விக்காகவும், வியாபாரத்துக்காகவும் பயணிப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்று வாதிட்டார்.

திட்டம்

அதையடுத்து நீதிபதிகள், ‘இரவு நேர போக்குவரத்து பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் அரசிடம் கோரிக்கை மனு கொடுக்கலாம். அந்த மனுவை அரசு பரிசீலித்து தகுந்த ஒரு திட்டத்தை வகுத்து, அதுகுறித்து வருகிற 10-ந் தேதி அறிக்கையாக இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

Next Story