சமுதாய, அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் முதல்-அமைச்சர் உத்தரவு


சமுதாய, அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் முதல்-அமைச்சர் உத்தரவு
x
தினத்தந்தி 3 March 2022 5:31 AM IST (Updated: 3 March 2022 5:31 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் திரும்பும் வகையில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் தீவிர முயற்சியால் வாரந்தோறும் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 9 கோடியே 68 ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

முககவசம் அணியாதவர்கள் மீது அபராத நடவடிக்கையும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பலனாக கொரோனா தொற்று பரவல் வேகம் வெகுவாக குறைந்துவிட்டது. தற்போது தினசரி பாதிப்போர் எண்ணிக்கை 350-க்கு கீழ் வந்துவிட்டது. கொரோனா தாக்கம் குறைவதற்கு ஏற்ப கட்டுப்பாடுகளும் தொடர்ந்து தளர்த்தப்பட்டு வருகின்றன.

தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முழுமையாக திரும்பும் வகையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன.

மு.க.ஸ்டாலின் உத்தரவு

இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக் கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை 15.2.2022-ன் படி ஒரு சில கட்டுப்பாடுகள் நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. 25.2.2022 அன்று ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில், கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதாரம் தொடர்பான தளர்வுகள் உள்பட இதர தளர்வுகளை அறிவிக்க அபாய மதிப்பீடு அடிப்படையிலான அணுகுமுறையை கடைபிடிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

திருமணம் மற்றும் இறப்புகளுக்கு...

எனது வழிகாட்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை கருத்தில் கொண்டும், மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக மீள திரும்புவதற்கு ஏதுவாகவும் இதுவரை நடைமுறையில் இருந்து வந்த சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை 3-ந்தேதி (இன்று) முதல் நீக்கப்படுகிறது.

மேலும், தொற்றுப் பரவலை கட்டுக்குள் வைத்திட இன்று முதல் 31-ந்தேதி வரை திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் 500 நபர்களுக்கு மிகாமல் நடத்த அனுமதிக்கப்படும். இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 250 நபர்கள் பங்கேற்கலாம்.

இந்த 2 கட்டுப்பாடுகள் தவிர்த்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக விதிக்கப்பட்டிருந்த இதர கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.

முககவசம் கட்டாயம்

மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் தொடர்ந்து கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும். மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு உங்கள் அனைவரையும் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொதுமக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் மீண்டும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தபடுமோ? என்ற தயக்கம், அச்சம் வியாபாரிகள், பொதுமக்கள் மத்தியில் நிலவியது. சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு விமர்சனங்களும், கருத்துக்களும் பரவின.

இந்த நிலையில் இந்த யூகங்கள் அனைத்துக்கும் மு.க.ஸ்டாலினின் இந்த அறிக்கை தக்க பதிலடியாக அமைந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story