சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க குமரிமுனையில் அமையுமா விமான நிலையம்


சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க குமரிமுனையில் அமையுமா விமான நிலையம்
x
தினத்தந்தி 3 March 2022 3:48 PM IST (Updated: 3 March 2022 3:48 PM IST)
t-max-icont-min-icon

நமது நாட்டின் எல்லையை வரையறுப்பவர்கள் இமயம் முதல் குமரி வரை என்று சொல்வதுண்டு. அதன்படி நாட்டின் தென் எல்லையாக அமைந்துள்ள குமரி முனை, பூகோள வரைபடத்தின் பாதப்பகுதியாக அமைந்துள்ளது.

கன்னியாகுமரி என்றாலே உலக நாடுகளில் உள்ளவர்கள் அனைவரும் அறிந்திருக்கும் வகையில் சர்வதேச சுற்றுலாத்தலமாக இது திகழ்கிறது. அந்த அளவுக்கு உலகெங்கும் சென்று தேடினாலும் காணக்கிடைக்காத அதிசயங்களை இந்த சுற்றுலாத்தலம் கொண்டுள்ளது என்றால் அது மிகையில்லை. இயற்கையாகவே பசுமையின் செழிப்போடு காணப்படும் குமரி மாவட்டத்தின் அழகைக் காண கண்கோடி வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும்.

சுற்றுலா மாவட்டம்

வங்கக் கடல், இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய முக்கடல்களின் சங்கமம், ஒரே இடத்தில் சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் காணும் இயற்கையின் சிறப்பு, உலகுக்கே பொதுமறை வகுத்து தந்த அய்யன் வள்ளுவருக்கு கடலின் நடுவே உள்ள பாறையில் வானுயர்ந்த சிலை, மற்றொரு பாறையில் சுவாமி விவேகானந்தருக்கு மண்டபம், கடற்கரையில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவு மண்டபம், முன்னாள் முதல்-அமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் மணிமண்டபம், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா ஆலயம் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டது கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலாத்தலம்.

இதுமட்டுமின்றி வட்டக்கோட்டை, திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், உதயகிரி கோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, முட்டம் கடற்கரை, காளிகேசம், பேச்சிப்பாறை அணைக்கட்டு, பெருஞ்சாணி அணைக்கட்டு போன்ற பல்வேறு சுற்றுலாத்தலங்களையும் குமரி மாவட்டம் கொண்டுள்ளது. மேலும் புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், குமாரகோவில் முருகன் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் மற்றும் கோட்டார் புனித சவேரியார் பேராலயம், கற்கோவில் உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்கள், தேங்காப்பட்டணம் மசூதி உள்ளிட்ட பள்ளிவாசல்கள் என மும்மத ஆன்மிக தலங்களையும் இந்த மாவட்டம் கொண்டுள்ளது. எனவே சுருங்கச் சொல்லப் போனால் குமரி மாவட்டம் சுற்றுலா மாவட்டம் என்றே கூறலாம்.

பயண நேரம் அதிகம்

இதனால் குமரி மாவட்டத்துக்கு வந்து செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆண்டின் 4 மாதங்கள் அதாவது ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய மாதங்களைத்தவிர மற்ற 8 மாதங்களும் கன்னியாகுமரியின் சீசன் காலங்களாக கருதப்படுகிறது. கொரோனா காலத்துக்கு முன்புவரை மாதந்தோறும் 6 லட்சம் உள்நாட்டு பயணிகளும், 11 ஆயிரம் வெளிநாட்டு பயணிகளும் வந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.

குமரி மாவட்டத்துக்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் ரெயில்கள் மூலமாகவோ அல்லது திருவனந்தபுரம், தூத்துக்குடி, மதுரை, சென்னை, பெங்களூரு விமான நிலைங்கள் மூலமாக வந்து, அங்கிருந்து வாகனங்கள் அல்லது ரெயில்கள் மூலமாகவும் குமரிக்கு வந்து செல்கிறார்கள். இதனால் வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் குமரி மாவட்டத்துக்கு வந்து செல்பவர்களின் பயண நேரம் அதிகரிக்கிறது. ரெயில்கள் மூலமாக வருகை தருபவர்கள் குறைந்தது 1 நாள் முதல் அதிகபட்சமாக 5 நாட்கள் வரையிலும், விமானங்கள் மூலமாக வருபவர்கள் குறைந்தது ஒரு நாள் முதல் அதிகபட்சமாக 2 நாட்கள் வரையிலும் பயண நேரமாக செலவிட வேண்டியுள்ளது.

அன்னிய செலாவணி அதிகரிக்கும்

இன்றைய அவசரமான காலத்தில் வீணாக யாரும் நேரத்தை செலவிட விரும்பவில்லை. அதிலும் வசதி படைத்தவர்கள் பயண களைப்பு தெரியாமல் இருக்க விரைவாக, குறைந்த பயண நேரத்தில் செல்வதைத்தான் விரும்புகிறார்கள். மேலும் கன்னியாகுமரி போன்ற சுற்றுலாத்தலங்களை காண விரும்பும் வயோதிகர்கள், பெண்கள் போன்றோரும் நீண்டதூரத்தில் இருந்து வந்து செல்வதற்கு விமான பயணத்தையே விரும்புகிறார்கள். அதேபோல் வெளிநாடுகளில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பெருநகரங்களுக்கு விமானங்களில் வந்து அங்கிருந்து கார் அல்லது ரெயில்களில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயண காலங்கள் மற்றும் தங்கும் இடங்களுக்கான செலவுகள் அதிகரிக்கிறது. பெருநகரங்களில் இருந்து கன்னியாகுமரிக்கு விமானங்கள் இயக்கப்பட்டால் பயண நேரமும் குறையும். வீண் செலவும் குறையும் என்கிறார்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.

அதனால் கன்னியாகுமரியில் அல்லது குமரி மாவட்ட பகுதியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது சுற்றுலா பயணிகள் மற்றும் குமரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. விமான நிலையம் அமையும் பட்சத்தில் குமரி மாவட்டத்துக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன்மூலம் குமரி மாவட்டத்துக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் அன்னிய செலாவணி அதிகரிக்கும்.

சாத்தியக்கூறு இல்லை

மேலும் விமான நிலையம் அமையும் பட்சத்தில் அவை சார்ந்த பல்வேறு தொழில்கள் உருவாகும். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். அதனால் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இதுதொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் மத்திய அரசிடமும், நாடாளுமன்றத்திலும் கோரிக்கை வைத்தும், குரல் கொடுத்தும் வருகிறார்கள்.

இதன் காரணமாக சாமிதோப்பு அருகில் உள்ள உப்பள பகுதியை தேர்வு செய்து, அதில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டது. அந்த இடத்தை மத்திய விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு செய்தனர். ஆய்வின்போது அந்த இடத்தில் விமான நிலையம் அமைக்க சாத்தியக்கூறுகள் இல்லை என்று மத்திய அரசிடம் அவர்கள் அறிக்கை அளித்திருப்பதாக தெரிகிறது. மேலும் ஒரு விமான நிலையத்தில் இருந்து புதிதாக அமைய இருக்கும் விமான நிலையத்துக்கும் 200 முதல் 300 கி.மீ. வரையிலான தொலைவு இருக்க வேண்டும் என்பது விமான போக்குவரத்து துறையின் ஒரு விதியாக இருந்து வருகிறது.

சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை

ஆனால் 100 கி.மீ. தூரத்துக்குள் திருவனந்தபுரம் மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்கள் அமைந்திருப்பதால் கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைய வாய்ப்பில்லை என மத்திய விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளதாக குமரி மாவட்ட அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

எனவே கன்னியாகுமரியில் அல்லது குமரி மாவட்டத்தில் சர்வதேச விமான நிலையம் அமையாவிட்டாலும் சிறு, சிறு விமானங்களை இயக்குவதற்கு ஏற்ற வகையில் சிறு விமான நிலையமாவது அமைக்க வேண்டும் என்பதும், பின்னர் தேவைப்படும் பட்சத்தில் அந்த விமான நிலையத்தை தரம் உயர்த்தலாம் என்பதும் குமரி மாவட்ட மக்கள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது. மேலும் எதிர்காலங்களில் குமரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அந்த மாதிரியான காலகட்டங்களில் குமரி மாவட்டத்துக்கு விமான நிலையம் என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. அதே சமயத்தில் இந்தியாவின் தென்கோடி முனை என்ற சிறப்பை பெற்ற கன்னியாகுமரிக்கு மகுடம் சூட்டும் வகையில் விதிமுறையை தளர்த்தி விமான நிலையம் அமைக்கலாமே என்ற கருத்தும் எதிரொலிக்கிறது. எனவே மத்திய- மாநில அரசுகள் கன்னியாகுமரி பகுதியில் சிறிய விமான நிலையம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். அதற்கு குமரி மாவட்ட அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் தீவிரமான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பது சுற்றுலா ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Next Story