அய்யா வைகுண்ட சாமியின் 190-வது அவதார திருவிழா; திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்த பக்தர்கள்


அய்யா வைகுண்ட சாமியின் 190-வது அவதார திருவிழா; திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 4 March 2022 1:29 PM IST (Updated: 4 March 2022 1:29 PM IST)
t-max-icont-min-icon

அய்யா வைகுண்ட சாமியின் 190-வது அவதார திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் குவிந்த வருகின்றனர்.

திருச்செந்தூர்,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 190-வது அவதார தினவிழா இன்று நடந்தது. இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு தாலாட்டு பாடுதல், பள்ளி உணர்த்தல் அபயம் பாடுதல் நடந்தது. 

பின்னர் காலை 7 மணிக்கு சூரிய உதயத்தில் கடல் பதமிட்டு, அவதாரபதிக்கு அய்யா வைகுண்டர் அழைத்து வரப்பட்டார். அப்போது திரளான மக்கள் "அய்யா சிவ சிவ அரகரா அரகரா" என்று கூறி அய்யா வைகுண்டரை வழிபட்டனர். பின்னர் அவதார தின விழா பணிவிடையும், அன்னதர்மமும் நடந்தது. மேலும் பக்தர்களுக்கு பிரசாரம் வழங்கப்பட்டது.

முன்னதாக நேற்று அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, உகபடிப்பு, அன்னதர்மம் நடந்தது. மதியம் உச்சிபடிப்பு, பணிவிடை, அன்னதர்மமும், இரவு 7 மணிக்கு பணிவிடையை தொடர்ந்து அய்யா புஷ்ப வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது.

பின்னர், திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி பேராசிரியை ஸ்ரீமதி தியாகராஜன், பாம்பன்குளம் நந்தினி ஆகியோர் திரு ஏடு வாசித்தனர்.

அகிலத்திரட்டில் வாழ்வியல் கருத்து மற்றும் அய்யா வைகுண்டரின் அவதார மகிமை என்ற தலைப்பில் அகிலத்திரட்டு அம்மானை கருத்துரை நடந்தது.  

பின்னர் 'செந்தூர் பதியில் உதித்த அய்யா வைகுண்டர்' அகிலத்திரட்டில் அதிகம் வலியுறுத்துவது சமயப் புரட்சியா? சமுதாயப் புரட்சியா? என்ற  தலைப்பில் அய்யாவழி சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. தொடர்ந்து, இரவு ஸ்ரீ குரு சிவச்சந்திரரின் அய்யாவின் அருளிசை வழிபாடு நடந்தது.

திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் இன்ஸ்பெக்டர் முரளிதரன் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.




Next Story