125 நகராட்சிகளின் தலைவர் தேர்தலில் தி.மு.க. வெற்றி 395 பேரூராட்சி தலைவர்கள் பதவிகளையும் கைப்பற்றியது


125 நகராட்சிகளின் தலைவர் தேர்தலில் தி.மு.க. வெற்றி 395 பேரூராட்சி தலைவர்கள் பதவிகளையும் கைப்பற்றியது
x
தினத்தந்தி 5 March 2022 3:26 AM IST (Updated: 5 March 2022 3:26 AM IST)
t-max-icont-min-icon

நேற்று நடந்த மறைமுக தேர்தலில் 125 நகராட்சிகளின் தலைவர் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. 395 பேரூராட்சி தலைவர்கள் பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றியது.

சென்னை,

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளுக்கு நடந்த மறைமுக தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள் ஆகிய பதவியிடங்களை நிரப்பிட சாதாரண மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் 21 மாநகராட்சி மேயர் பதவியிடங்களில் 20 மாநகராட்சிகளில் தி.மு.க.வும், ஒரு மாநகராட்சியில் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளன.

21 மாநகராட்சி துணை மேயர் பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 15 மாநகராட்சிகளில் தி.மு.க.வும், 2 மாநகராட்சிகளில் காங்கிரஸ், தலா ஒரு மாநகராட்சியில் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, வி.சி.க. வெற்றியை பெற்றிருக்கின்றன.

நகராட்சி

138 நகராட்சி தலைவர் பதவியிடங்களை பொறுத்தவரையில், 125 இடங்களில் தி.மு.க.வும், 2 இடங்களில் அ.தி.மு.க.வும், தலா ஒரு இடத்தில் காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி.க.வும், 4 இடங்களில் சுயேச்சையும் வெற்றியை பதிவு செய்துள்ளன. மீதமுள்ள 4 பதவியிடங்களுக்கு குறைவெண் வரம்பின்மை உள்ளிட்ட காரணமாக தேர்தல் நடைபெறவில்லை.

138 நகராட்சி துணைத்தலைவர் பதவியிடங்களுக்கு, 98 இடங்களில் தி.மு.க.வும், 9 இடங்களில் காங்கிரசும், 7 இடங்களில் அ.தி.மு.க.வும், 4 இடங்களில் ம.தி.மு.க.வும், தலா 2 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, வி.சி.க.வும், 3 இடங்களில் சுயேச்சையும் வெற்றி பெற்ற நிலையில், மீதம் இருக்கும் 11 பதவியிடங்களுக்கு குறைவெண் வரம்பின்மை உள்ளிட்ட காரணமாக தேர்தல் நடக்கவில்லை.

பேரூராட்சி

489 பேரூராட்சி தலைவர் பதவியிடங்களை பார்க்கும் போது, தி.மு.க. 395 இடங்களிலும், காங்கிரஸ் 20 இடங்களிலும், அ.தி.மு.க. 18 இடங்களிலும், பா.ஜ.க. 8 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 3 இடங்களிலும், ம.தி.மு.க., அ.ம.மு.க. தலா 2 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு, வி.சி.க., மனிதநேய மக்கள் கட்சி தலா ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 25 இடங்களிலும் வெற்றியை பெற்றுள்ளன. எஞ்சிய 13 இடங்களுக்கு குறைவெண் வரம்பின்மை உள்ளிட்ட காரணமாக தேர்தல் நடைபெறவில்லை.

489 பேரூராட்சி துணைத்தலைவர் பதவியிடங்களுக்கு நடந்த தேர்தலில் தி.மு.க. 331 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும், அ.தி.மு.க. 27 இடங்களிலும், பா.ஜ.க. 11 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 5 இடங்களிலும், பா.ம.க., வி.சி.க. தலா 3 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., அ.ம.மு.க. தலா 2 இடங்களிலும், தே.மு.தி.க., மனிதநேய மக்கள் கட்சி தலா ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 34 இடங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. இதில் மீதம் இருக்கும் 35 இடங்களில் குறைவெண் வரம்பின்மை உள்ளிட்ட காரணமாக தேர்தல் நடக்கவில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story