போலீசுக்கு எதிரான புகாரை அவர்களே எப்படி விசாரிக்க முடியும்? ஐகோர்ட்டு கேள்வி


போலீசுக்கு எதிரான புகாரை அவர்களே எப்படி விசாரிக்க முடியும்? ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 5 March 2022 4:24 AM IST (Updated: 5 March 2022 4:24 AM IST)
t-max-icont-min-icon

மாநில மற்றும் மாவட்ட அளவில் போலீஸ் அதிகாரிகளை கொண்டு ஆணையம் அமைத்தால், போலீசுக்கு எதிரான புகாரை அவர்களே எப்படி விசாரிக்க முடியும் என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை,

போலீஸ் சித்ரவதை மற்றும் லாக்-அப் மரணங்கள் தொடர்பான புகார்களை உடனுக்குடன் விசாரிக்கும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் போலீஸ் புகார் ஆணையம் அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, கடந்த 2013-ம் ஆண்டு தமிழகத்தில் ‘காவல்துறை சீர்திருத்தச் சட்டம்’ கொண்டு வரப்பட்டு, போலீசாருக்கு எதிரான புகார்களை விசாரிக்க மாநில மற்றும் மாவட்ட அளவில் புகார் ஆணையங்கள் அமைக்கப்பட்டன.

முன்னாள் ஐ.ஜி. வழக்கு

மாநில அளவில் உள்துறைச் செயலாளர் தலைமையில் டி.ஜி.பி. மற்றும் கூடுதல் டி.ஜி.பி. ஆகியோரை உறுப்பினர்களாகவும், மாவட்ட அளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகளை உறுப்பினர்களாகவும் கொண்ட ஆணையங்கள் அமைக்கப்பட்டன.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிரானது என கூறி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச்செயலாளரும், ஓய்வுபெற்ற ஐ.ஜி.யுமான ஏ.ஜி.மவுரியா உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்தனர்.

ஏன் நியமிக்கவில்லை?

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு இதுதொடர்பாக சட்டம் இயற்றியுள்ளது. மாநில மற்றும் மாவட்ட அளவில் புகார் ஆணையங்களை அமைத்துள்ளது என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘சுதந்திரமான நபரை ஏன் இந்த புகார் ஆணையத்தில் நியமிக்கவில்லை? சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு மாறாக இந்த புகார் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது’ என்று கருத்து தெரிவித்தனர்.

விளக்கம் வேண்டும்

பின்னர், ‘அனைத்து மாநிலங்களிலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் முறையாக போலீஸ் புகார் ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் போலீசுக்கு எதிரான புகார்களை அவர்களே எப்படி விசாரிக்க முடியும்? எனவே இதுதொடர்பாக விதிகளில் உரிய திருத்தம் கொண்டு வருவது குறித்து தமிழக அரசு ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Next Story