‘திராவிட மாடல்' அரசு என்று கூற காரணம் என்ன? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்


‘திராவிட மாடல் அரசு என்று கூற காரணம் என்ன? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
x
தினத்தந்தி 6 March 2022 5:16 AM IST (Updated: 6 March 2022 5:16 AM IST)
t-max-icont-min-icon

‘திராவிட மாடல்' அரசு என்று கூற காரணம் என்ன? என்பது குறித்து சென்னையில் நடந்த பள்ளி விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் பேரன், பேத்தி

சென்னை சிஷ்யா பள்ளியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:-

கல்வி என்பது மனித சமுதாயத்தினுடைய அடிப்படைகளில் ஒன்றாக விளங்கி கொண்டிருக்கிறது. தரமான கல்விதான் ஒரு மனிதனை அறிவுள்ளவனாக நல்வழிப்படுத்தி, அவனுடைய உயர்வுக்கு உறுதுணையாக இருக்கும். அத்தகைய கல்வியை வழங்கும் நிறுவனமாக இந்த ‘சிஷ்யா பள்ளி' செயல்பட்டு கொண்டிருக்கிறது. சிஷ்யா பள்ளியில் இருந்து ஏராளமான சாதனையாளர்கள் உருவாகி இருக்கிறார்கள். அப்படிபட்ட இந்த பள்ளியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

இந்த பள்ளியில் என்னுடைய பேரன், பேத்தியும் கூட படித்துகொண்டிருக்கிறார்கள். எனக்கு இங்கு வந்தவுடன் ஒரு எண்ணம் வந்தது. பேரனையும், பேத்தியையும் உடனே பார்த்தேன். நான் இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலையில், அவர்களை அடிக்கடி என்னால் பார்க்கமுடியாது. இது மாதிரி பள்ளிக்கூட நிகழ்ச்சிக்கு வந்தால்தான் பார்க்க முடியும். அதற்காகவே அடிக்கடி பள்ளிக்கூடத்துக்கு வரவேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கு வந்தது. அதற்காக, பள்ளி நிர்வாகம் அடிக்கடி என்னை கூப்பிடக்கூடிய முயற்சியில் ஈடுபட்டுவிடாதீர்கள். ஏனென்றால், எனக்கு இருக்கக்கூடிய பணி அப்படி. இந்த பள்ளியில் அவர்கள் படித்துகொண்டிருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. என்னுடைய பேரப்பிள்ளைகள் மட்டுமல்ல, இந்த பள்ளியிலே படிக்கக்கூடிய மாணவர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா மாணவர்களுமே என்னுடைய செல்வங்கள்தான். என்னுடைய அன்புக்குரியவர்கள்தான். என்னுடைய பாசத்துக்குரியவர்கள்தான்.

‘திராவிட மாடல்’ அரசு

அதனால்தான் தரமான கல்வியை நமது அரசு, இன்றைக்கு இருக்கக்கூடிய அரசு பல்வேறு திட்டங்களை அதற்காக செயல்படுத்திகொண்டிருக்கிறது. அண்மையிலே கூட என்னுடைய பிறந்தநாளன்று ‘நான் முதல்வன்' என்ற ஒரு திட்டத்தை அறிமுகம் செய்தேன்.

‘கோடிங்', ‘ரோபோடிக்ஸ்' போன்ற எதிர்காலத்திற்கு தேவையான தொழில்நுட்பங்களையும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி, திறன்மிகு மாணவர்களாக அவர்களை உருவாக்கக்கூடிய திட்டம்தான் அந்த திட்டம். என்னுடைய நெஞ்சுக்கு நெருக்கமான திட்டம் என்று அதை சொல்லலாம். கல்வி கற்க எந்த தடையும் இருக்கக்கூடாது என்று நினைக்கின்றவன் நான். அதுதான் திராவிட சிந்தனை. அந்த சிந்தனையோடு செயல்படுவதால்தான் நமது அரசை, ‘திராவிட மாடல்' அரசு என்று நான் சொல்லிக்கொண்டு வருகிறேன். அந்த வகையில் நமது அரசின் முழக்கம்தான், சிஷ்யா பள்ளியின் முழக்கமாகவும் இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சிஷ்யா பள்ளியின் அறங்காவலர் சலீம் தாமஸ், பள்ளி முதல்வர் ஓமனா தாமஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story