காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மெரினா கடற்கரையில் கடல் அலைகள் கடும் சீற்றம்


காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மெரினா கடற்கரையில் கடல் அலைகள் கடும் சீற்றம்
x
தினத்தந்தி 7 March 2022 12:19 AM IST (Updated: 7 March 2022 12:19 AM IST)
t-max-icont-min-icon

காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகம் நோக்கி நகர்வதால் மெரினா கடற்கரையில் கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்பட்டன. காற்றும் பலமாக வீசியதால் மணல்பரப்பு புழுதிமண்டலமாக காட்சியளித்தது.

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இது தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்பட 11 மாவட்டங்களில் தரைக்காற்று பலமாக வீசும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி சென்னையில் நேற்று வழக்கத்துக்கு மாறாக காற்றின் வேகம் அதிகரித்திருந்தது. மெரினா கடற்கரையில் கடல் அலைகள் கடுமையான சீற்றத்துடன் காணப்பட்டன. பலத்த சப்தம் எழுப்பியவாறு ஆக்ரோசமாக கரையில் மோதின. விவேகானந்தர் இல்லம் எதிரே உள்ள பகுதியில் கடல்நீர் மணல்பரப்புக்குள் புகுந்தது. இதனால் அந்தப் பகுதி நீச்சல்குளம் போல மாறியது. அதில் சிறுவர்-சிறுமியர் உற்சாக குளியல் போட்டனர்.

புழுதிமண்டலம்

அதேபோல மெரினா கடற்கரை மணல்பரப்பில் புழுதிக்காற்று பலமாக வீசியது. ஒரு இடத்தில் இருந்தவர்கள் அருகில் இருந்தவர்களைக்கூட பார்க்கமுடியாத அளவுக்கு புழுதிமண்டலமாக காட்சியளித்தது. விடுமுறை தினமான நேற்று மெரினா கடற்கரையில் பொழுதைக் கழிப்பதற்காக ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் கடல் அலையின் சீற்றம், புழுதிக்காற்று உள்ளிட்ட இடர்பாடுகளால் இயற்கை அழகை ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ஆனால் ஒரு சில காதல் ஜோடிகளோ, சீற்றத்துடன் கரையை மோதிச் செல்லும் அலைகளோடு ஆபத்தை உணராமல் விளையாடி மகிழ்ந்ததையும் காணமுடிந்தது. அதேபோல பட்டினப்பாக்கம் பகுதியிலும் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டன. குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு பின்னர் அந்தப் பகுதியில் கடல் சுமார் 20 மீட்டர் அளவுக்கு உள்வாங்கியதாகவும், பின்னர் சில மணி நேரத்தில் இயல்புநிலைக்குத் திரும்பியதாகவும் அந்த பகுதிவாசிகள் தெரிவித்தனர்.

Next Story