“யூடியூபை தவறாக பயன்படுத்தி வருகின்றனர்” மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வேதனை


“யூடியூபை தவறாக பயன்படுத்தி வருகின்றனர்” மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வேதனை
x
தினத்தந்தி 9 March 2022 1:09 AM IST (Updated: 9 March 2022 1:09 AM IST)
t-max-icont-min-icon

“யூடியூபை தவறாக பயன்படுத்தி வருகின்றனர்” மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வேதனை.

மதுரை,

யூடியூபில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, தற்போதைய முதல்-அமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறான வீடியோக்களை சாட்டை துரைமுருகன் என்பவர் வெளியிட்டுள்ளார். இதையடுத்து துரைமுருகன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஆனால் அவர் அந்த நிபந்தனையை மீறி, மீண்டும் அவதூறு வீடியோக்களை வெளியிட்டதாகவும், அவருக்கு அளித்த ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும் போலீஸ் தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்தபோது யூடியூபில் தேவையற்ற பதிவுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அரசிடம் என்ன திட்டம் உள்ளது? அதற்கான சாத்தியக்கூறுகள் என்ன? என்று அரசு தரப்பில் பதில் அளிக்கவும், யூடியூப் சம்பந்தமான விவரங்களை சேகரித்து கோர்ட்டுக்கு உதவ, வக்கீல் ராமகிருஷ்ணனை ஐகோர்ட்டு நியமித்தது. இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, யூடியூப் நிறுவனம், இந்தியாவில் பல லட்சம் பேருக்கு வேலை வழங்கி உள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. யூடியூப் மூலம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதனை பலர் தவறாக உபயோகப்படுத்தி வருகின்றனர். எனவே வக்கீல் ராமகிருஷ்ணன், யூடியூப் குறித்து விவரங்களை பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

Next Story