நவீன கருவிகள் மூலம் 31 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்கள் அளவீடு அறநிலையத்துறை நடவடிக்கை


நவீன கருவிகள் மூலம் 31 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்கள் அளவீடு அறநிலையத்துறை நடவடிக்கை
x
தினத்தந்தி 9 March 2022 1:15 AM IST (Updated: 9 March 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான 31 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நவீன கருவிகள் மற்றும் நில அளவையர் மூலம் அளவீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பல்வேறு கோவில்களில் ஆய்வு மேற்கொண்டு கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில் நிலங்கள் நவீன ‘ரோவர்’ உபகரணங்களை பயன்படுத்தி அளவீடு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

எல்லைக்கல்

அதன்படி மண்டல வாரியாக தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 660.54 ஏக்கர், திருச்சியில் 3 ஆயிரத்து 151.14 ஏக்கர், திருப்பூரில் 3 ஆயிரத்து 43.77 ஏக்கரும், நெல்லையில் 2 ஆயிரத்து 705.79 ஏக்கர், சிவகங்கையில் 1,897.51 ஏக்கர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இதுவரை 31 ஆயிரத்து 670.64 ஏக்கர் நிலங்கள் அளக்கப்பட்டு உள்ளது.

அளவீடு செய்யப்பட்ட நிலங்களில் விழுப்புரத்தில் 106 கற்களும், திருவண்ணாமலையில் 167 கற்களும், காஞ்சீபுரத்தில் 98 கற்களும், கோவையில் 400 கற்களும் உள்பட பல்வேறு மாவட்டத்தில் எச்.ஆர்.சி.இ. என்று ஆங்கிலத்தில் பெயர் பொறிக்கப்பட்ட எல்லைக்கல் நட்டு கம்பிவேலி அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

கோவிலுக்கு வருவாய்

மீதமுள்ள நிலங்களை 150 நில அளவையர்கள் மூலம் 56 ரோவர் கருவிகளை கொண்டு அளவீடு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க தாசில்தார்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கோவில் நிலங்களை கண்டறிவதுடன் ஆக்கிரமிப்புதாரர்களிடம் இருந்து நிலங்களை பாதுகாத்து கோவிலுக்கு வருவாய் ஈட்ட ஏதுவாக இருக்கும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

யானைகளுக்கு மருத்துவ பரிசோதனை

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காணொலி காட்சி மூலம் நடந்த அனைத்து மண்டல கமிஷனர்களுடனான சீராய்வு கூட்டத்தில் கோவில் யானைகளை 15 நாட்களுக்கு ஒருமுறை டாக்டர்களை கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து, அவற்றின் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும் என்று கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

Next Story