ரஷியா- உக்ரைன் போர் காரணமாக சமையல் எண்ணெய் விலை ‘கிடு கிடு' உயர்வு


ரஷியா- உக்ரைன் போர் காரணமாக சமையல் எண்ணெய் விலை ‘கிடு கிடு உயர்வு
x
தினத்தந்தி 10 March 2022 5:27 AM IST (Updated: 10 March 2022 5:27 AM IST)
t-max-icont-min-icon

ரஷியா- உக்ரைன் இடையே நிலவி வரும் போர் காரணமாக சமையல் எண்ணெய் விலை கடந்த 2 வாரங்களில் லிட்டருக்கு ரூ.50 முதல் ரூ.55 வரை உயர்ந்து இருக்கிறது.

சென்னை,

ரஷியா-உக்ரைன் இடையே கடந்த சில நாட்களாக போர் நடந்து வருகிறது. இந்த போரின் தாக்கம் பல்வேறு விதங்களில் பொது மக்களை பாதித்து வருவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக தங்கத்தின் விலை இந்த போர் காரணமாக கடந்த 2 வாரத்தில் தாறுமாறாக உயர்ந்து இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் விலையும் 'கிடுகிடு'வென உயர்ந்து கொண்டே செல்கிறது. அதிலும் சுட்டிக்காட்டி சொல்ல வேண்டும் என்றால், சூரியகாந்தி மற்றும் பாமாயில் எண்ணெய் விலை கடந்த 2 வாரங்களில் மட்டும் லிட்டருக்கு ரூ.50 முதல் ரூ.55 வரை அதிகரித்துள்ளது.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சூரியகாந்தி எண்ணெய் விலை மொத்த விற்பனை கடையில் ஒரு லிட்டர் ரூ.120 என்று விற்பனையான நிலையில், தற்போது அது ரூ.170-க்கு விற்பனை ஆகிறது. இதுவே சில்லரை விற்பனை கடைகளில் ரூ.140-க்கு விற்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய், தற்போது ரூ.190 என்ற விலையில் விற்கப்படுகிறது.

விலை உயர்வு

இதேபோல் பாமாயிலை எடுத்துக் கொண்டால், கடந்த 2 வாரங்களுக்கு முன்னர், மொத்த விற்பனையில் ஒரு லிட்டர் ரூ.105-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து விலை உயர்ந்து, நேற்று ரூ.160-க்கு விற்பனை ஆனது. சில்லரை கடைகளில் விலையை பார்க்கும்போது, ரூ.125-க்கு விற்கப்பட்டு வந்த பாமாயில், ரூ.180-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரஷியா-உக்ரைன் இடையே நிலவும் போர் சூழல் காரணமாகவே இதன் விலைகள் உயர்ந்து வருகிறது என்று சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட் வியாபாரி பி.பாண்டியராஜன் தெரிவித்தார்.

இதில் சூரியகாந்தி எண்ணெயை பொறுத்தவரையில், உள்நாட்டில் நுகர்வின் பங்கு 10 சதவீதம் என்ற அளவில்தான் இருக்கிறது. மற்றவற்றை இறக்குமதியை நம்பித்தான் இருக்கிறோம். அந்தவகையில் உக்ரைன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சூரியகாந்தி எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம்தான் தற்போது விலை ஏற்றத்தில் நிற்கிறது. பற்றாக்குறை என்று வார்த்தை அளவில் கூறப்பட்டாலும், இதுவரையில் சூரியகாந்தி எண்ணெய் சப்ளையில் எந்தவித தட்டுப்பாடும் இல்லாமல்தான் இருக்கிறது என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

கவலையில் மக்கள்

இதேபோல் பாமாயிலும் ரஷியா- உக்ரைன் போர் காரணமாக விலை உயர்ந்தது என்றாலும், பாமாயிலை ஏற்றுமதி செய்யும் இந்தோனேசியா உள்நாட்டு சந்தையில் 20 சதவீதம் உற்பத்தியை விற்பனை செய்ய வேண்டும் என்று அங்கு கட்டாயம் ஆக்கப்பட்டு இருப்பதால், ஏற்றுமதியில் சற்று சுணக்கம் ஏற்பட்டுள்ளதும் இதன் விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. மேலும், மற்ற எண்ணெய் வகைகளான தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றின் விலையும் கடந்த 2 வாரங்களில் லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை உயர்ந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

உணவுப் பொருளில் எதிரொலிக்குமா?

‘எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல', ஏற்கனவே தங்கத்தின் விலையால் மக்கள் கவலை அடைந்து இருக்கும் நிலையில், தற்போது சமையல் எண்ணெய் விலை ஏற்றம் அவர்களை மேலும் கலக்கம் அடைய செய்திருக்கிறது.

சமையல் எண்ணெயின் விலை உயர்வு, எண்ணெயை சார்ந்திருக்கும் அனைத்து வகையான உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story