உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த கோவை மாணவர் நாடு திரும்ப விருப்பம்


உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த கோவை மாணவர் நாடு திரும்ப விருப்பம்
x
தினத்தந்தி 13 March 2022 5:30 AM IST (Updated: 13 March 2022 5:30 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த கோவை மாணவர், பெற்றோரின் உருக்கமான வேண்டுகோளை ஏற்று மனம் மாறி நாடு திரும்ப விருப்பம் தெரிவித்து உள்ளார்.

கோவை மாணவர்

கோவையை அடுத்த துடியலூர் சுப்பிரமணியம்பாளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி ஜான்சி லட்சுமி. இவர்களுக்கு சாய்நிகேஷ் (வயது 22), ரோகித் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகன் சாய்நிகேஷ் காரமடையில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு வரை படித்தார். இவர் சிறுவயதில் இருந்தே ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் இருந்தார்.

ஆனால் உயரம் குறைவு காரணமாக ராணுவத்தில் சேரும் அவரின் முயற்சி பலன் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அவர், அமெரிக்க ராணுவத்தில் சேர எடுத்த முயற்சியிலும் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் அவர் உக்ரைன் நாட்டுக்கு சென்று அங்குள்ள பல்கலைக்கழகத்தில் சேர்ந்து விமானவியல் படித்து வந்தார்.

உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்தார்

இதனிடையே உக்ரைன்- ரஷியா இடையே போர் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர். ஆனால் சாய்நிகேஷ் மட்டும் சொந்த நாடு திரும்பாமல், உக்ரைனில் உள்ள ஜார்ஜியா நேஷனல் லெஜியன் துணை ராணுவ பிரிவில் சேர்ந்து ரஷியாவுக்கு எதிராக போரிட்டு வருகிறார்.

இந்த நிலையில் சாய்நிகேசை அவரது பெற்றோர் தொடர்பு கொண்டு ஊருக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். மேலும் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற தனது ஆசை நிறைவேறி விட்டதாகவும் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவரது பெற்றோர் இந்திய வெளியுறவுத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே மத்திய, மாநில அரசுகளின் உளவுத்துறையினர் சாய்நிகேஷின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

உருக்கமான பேச்சு

இந்த நிலையில் தங்களது மகன் சாய்நிகேசை எப்படியாவது சமாதானம் செய்து இந்தியாவிற்கு வரவழைத்து விட வேண்டும் என்று அவரது பெற்றோர் தொடர்ந்து முயற்சி செய்து பேசி வந்தனர்.

அப்போது, உன்னை பார்க்க ஆசையாக உள்ளது. போர்முனையில் நீ இருக்கும் சூழலை கேட்கும்போது நெஞ்சம் பதைபதைக்கிறது. உன்னை விட்டால் எங்களுக்கு யார் இருக்கிறார்கள். எனவே உடனடியாக நாட்டிற்கு திரும்பி வர வேண்டும் என்று சாய்நிகேஷிடம் பெற்றோர் உருக்கமாக பேசி அழைப்பு விடுத்தனர்.

திரும்பி வர விருப்பம்

எறும்பு ஊற கல்லும் தேயும் என்ற பழமொழிக்கு ஏற்ப பெற்றோரின் தொடர் பேச்சு சாய்நிகேஷின் மனதை உருக்கியது. இதனால் அவர் தனது பிடிவாதத்தை விட்டு கோவை திரும்ப விரும்புவதாக தனது பெற்றோரிடம் கூறினார். இந்த தகவலை உளவுத் துறை உதவியுடன், இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்ட சாய்நிகேஷின் பெற்றோர் தெரிவித்தனர்.

அதற்கு இந்திய தூதரக அதிகாரிகள், பொறுமையுடன் இருக்குமாறும், அவரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறியதாகவும் சாய்நிகேஷின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால் உக்ரைனில் இருந்து சாய்நிகேசை இந்தியா மீட்டு வர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story