5 மாநில தேர்தல் படுதோல்வியால் காங்கிரஸ் தலைமையில் மாற்றமா? கே.எஸ்.அழகிரி பதில்
கட்சியின் தற்காலிக தலைவர் என்பது ஒரு தொழில் நுட்ப வார்த்தை தான், தலைவர் சோனியாகாந்திதான் என்றும் அவர்தான் கட்சியை தொடர்ந்து வழிநடத்துவார் என்றும் உறுதியாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசுகிறார். அதில், 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பேசுகையில், மக்கள் அளித்துள்ள இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், வெற்றி தோல்வி என்பது எந்த கட்சிக்கும் நிலையானது அல்ல என்றும் இந்த முடிவுகளில் கிடைத்துள்ள அனுபவங்களில் இருந்து தவறுகளை திருத்திக்கொண்டு வரும் தேர்தல்களில் வெற்றி பெற தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
தேர்தல் தோல்வியால் தலைமைக்கு எதிராக எழுந்து வரும் கலகக்குரல்கள் பற்றியும் கட்சிக்கு முழுமையான தலைவர் இல்லாதது குறித்தும் பேசுகையில், கட்சியின் தற்காலிக தலைவர் என்பது ஒரு தொழில் நுட்ப வார்த்தை தான், தலைவர் சோனியாகாந்திதான் என்றும் அவர்தான் கட்சியை தொடர்ந்து வழிநடத்துவார் என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தி ஒரு பகுதிநேர அரசியல்வாதியாக செயல்படுவதாக வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கையில், பிரதமர் மோடி இந்த 8 ஆண்டுகளில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்தது இல்லை, நாடாளுமன்ற நிகழ்வுகளிலும் அதிகம் பங்கேற்றது இல்லை என்று சுட்டிக்காட்டிய அவர், ஆனால் ராகுல்காந்தி பத்திரிகையாளர்களை அடிக்கடி சந்திக்கிறார், நாடாளுமன்றத்தில் அதிக நேரம் பேசி இருப்பதாகவும் கூறிய அவர் பிரதமர் மோடியை விடவும் ராகுல்காந்திதான் சிறந்த அரசியல்வாதி என்று தெரிவித்துள்ளார்.
மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தல் வியூகங்கள்? நாடாளுமன்ற தேர்தலோடு தமிழகத்திலும் தேர்தல் வரும் என்ற மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் எதிர்பார்ப்பு உள்பட சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜசேகரின் கேள்விகளுக்கு கே.எஸ்.அழகிரி விளக்கமாக பதில் அளித்துள்ளார்.
Related Tags :
Next Story