பங்குனி உத்திரத் திருவிழா: பழனியில் குவிந்த பக்தர்கள்...!


பங்குனி உத்திரத் திருவிழா: பழனியில் குவிந்த பக்தர்கள்...!
x
தினத்தந்தி 13 March 2022 4:51 PM IST (Updated: 13 March 2022 4:51 PM IST)
t-max-icont-min-icon

பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்று வருவதை முன்னிட்டு பழனியில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

பழனி,

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் தைப்பூச திருவிழாவில் பாதயாத்திரையாகவும், பங்குனி உத்திர திருவிழாவில் தீர்த்தக்காவடி எடுத்தும் கோவிலுக்கு பக்தர்கள் வருவது சிறப்பு அம்சமாகும்.

இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர திருவிழா, பழனி முருகன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்று வருவதை முன்னிட்டும் விடுமுறை நாள் என்பதாலும் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் சுமார் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் அதிகளவில் குவிந்ததால் பழனி அடிவாரம் மற்றும் நகர்புற பகுதிகளில் ஏராளமான வாகனங்கள் குவிந்தன. இதனால் அந்த பகுதிகளில் நெரிசல் ஏற்பட்டு பல மணி போக்குவரத்து நேரம் பாதிக்கப்பட்டது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 17-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 5 மணி அளவில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியாக மறுநாள் (18-ந்தேதி) தேரோட்டம் நடக்கிறது.

Next Story