நீட் தேர்வில் இருந்து நாட்டிற்கு விரைவில் விடுதலை கிடைக்கும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நீட் தேர்வில் இருந்து நாட்டிற்கு விரைவில் விடுதலை கிடைக்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
சென்னை திருவான்மியூரில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயத்தின் மகன் திருமணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று இன்று நடத்தி வைத்தார்.
திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு விலக்க பெற வேண்டும் என சட்டமன்றத்தில் ஒரு மசோதாவை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தோம். பல மாதங்களாக அந்த மசோதான கிடப்பில் போடப்பட்டது. அதன் பின்னர் நீட் மசோதா திருப்பி அனுப்பப்பட்டது.
தற்போது நேற்றைய சந்திப்பின் போது நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாக கவர்னர் உறுதி அளித்துள்ளார். நீட் விலக்கு மசோதாவை 2வது முறை திருப்பி அனுப்ப முடியாது என கவர்னர் தெரிவித்தார். நீட் விலக்கு முயற்சியில் முதல் வெற்றி பெற்றுள்ளோம்.
நீட் தேர்விற்கு விலக்கு பெறும் மசோதா என்ன நிலையில் இருக்கிறது என தெரியாமல் இருந்த நிலையில் கவர்னரை சந்தித்தபின் வெற்றி செய்தி கிடைத்துள்ளது.
நீட் தேர்வில் இருந்து நாட்டிற்கு விரைவில் விடுதலை கிடைக்கும். ஆதலால் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த திருமண நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரை முருகன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திக தலைவர் வீரமணி, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ செயலாளர் முத்தரசன், ஆ.ராசா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story