கோவை: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.38 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது..!


கோவை: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.38 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது..!
x
தினத்தந்தி 16 March 2022 5:45 PM IST (Updated: 17 March 2022 1:15 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.38 லட்சம் மோசடி செய்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை, 

கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஆதித்யன் (வயது 32). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் சிறு தொழில் நிறுவனங்கள் தொடங்குவது குறித்து தொழில் முனைவோர்களுக்கு ஆலோசனை வழங்கி வந்து உள்ளார். மேலும் தொழில்கள் மேம்பாடு மற்றும் விரிவாக்கத்திற்கும் ஆலோசனை வழங்கி வந்தார். 

இந்த நிலையில் தனக்கு தெரிந்த இங்கிலாந்தில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு ஆட்கள் தேவைப்படுவதாக தனக்கு தெரிந்த நண்பர்களிடம் கூறி வந்தார். மேலும் இதுதொடர்பாக அவர் விளம்பரபடுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனை நம்பிய இளைஞர்கள் அவரிடம் சென்று தங்களுக்கு இங்கிலாந்து நிறுவனத்தில் வேலை வாங்கி தரும்படி கூறியுள்ளனர். 

இதையடுத்து ஆதித்யன் அவர்களிடம் விசா, போக்குவரத்து செலவினம், தங்குமிடம் உள்ளிட்டவற்றிற்கா ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஒவ்வொரிடமும் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரிடம் கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பணம் கொடுத்தனர்.

இந்த நிலையில் அவரிடம் பணம் கொடுத்த இளைஞர்கள் தங்களுக்கு வேலை என்னானது என்று அடிக்கடி கேட்டனர். மேலும் தங்களுக்கு வேலை வாங்கி தர வேண்டும் அல்லது கொடுத்த பணத்தை திரும்ப தர வேண்டும் என்று கூறினர். ஆனால் அவர் பணம் ஏதும் திருப்பிதரவில்லை. 

இதனால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கோவை மாநகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். போலீஸ் விசாரணையில் ஆதித்யன் இதுவரை பல்வேறு இளைஞர்களிடம் ரூ.38 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஆதித்யனை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.


Next Story