உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்..!


உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்..!
x
தினத்தந்தி 17 March 2022 10:54 AM IST (Updated: 17 March 2022 10:54 AM IST)
t-max-icont-min-icon

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மதுரை,

மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். இதையொட்டி மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 5-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது. திருவிழா நாட்களில் மீனாட்சி-சுந்தரேசுவரர், பஞ்சமூர்த்திகளுடன் காலை, இரவு இரு வேளைகளிலும் 4 மாசி வீதிகளில் வலம் வந்து காட்சி அளிப்பர்.

எனவே நகரில் விட்டவாசல், அம்மன் சன்னதி தெரு, நான்கு மாசி வீதிகளிலும் போடப்படும் பந்தல்களை சுவாமி வாகனங்கள் தட்டாதவாறு 30 அடி உயரத்திற்கு மேல் அமைத்து கொள்ள வேண்டும். மேலும் வேப்பிலைத் தோரணங்களையும், சுவாமி வாகனங்கள் தட்டாமல் அமைக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் சித்திரை திருவிழாவில் சுவாமி வீதி உலா வரும் நேரங்களில் பக்தர்களால் சுவாமிக்கு சாத்துப்படி செய்ய இறைவனுக்கு உகந்த மாலைகள் சாத்துப்படி செய்யலாம். ஆனால் கேந்திபூ, மருதை வேர்கள் வைத்து கட்டப்பட்ட மாலைகள் சாத்துப்படிக்கு ஏற்று கொள்ளப்படமாட்டாது. திருக்கல்யாண தினத்தன்று மூலஸ்தான அம்மன், சுவாமிக்கும், உற்சவர் அம்மன், சுவாமிக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் மட்டுமே பட்டு பரிவட்டங்கள் சாத்தப்படும்.

உபயதாரர் மற்றும் பக்தர்கள் வழங்கும் காணிக்கை பரிவட்டங்கள் வாமாலையாக சூட்டப்படும். இந்த உற்சவம் தொடக்கம் முதல் அழகர்கோவில் கள்ளழகர் திருவிழா முடியும் 20-ந் தேதி வரை கோவில் சார்பாகவோ, உபயதாரர்கள் சார்பாகவோ உபயதிருக்கல்யாணம், தங்கரதம் உலா ஆகிய சேவைகள் பதிவு செய்து நடத்தப்படாது.

திருவிழாவில் நன்கொடையாளர்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்க விரும்பும் தண்ணீர் பாட்டில்கள், பிஸ்ெகட் பாக்கெட்டுகள், மஞ்சள் கயிறு, குங்குமம் மற்றும் இதர அனைத்து பொருட்களையும் கோவில் அலுவலகத்தில் நேரடியாக வழங்கி உரிய ரசீது பெற்று கொள்ளலாம். இந்த பொருட்கள் தொடர்பாக எந்த ஒரு தனி நபரிடமோ, நிறுவனத்திடமோ தொடர்பு கொள்ள வேண்டாம். அவ்வாறு யாரேனும் தனிப்பட்ட நபர்கள் அணுகினால் கோவில் நிர்வாகத்திடமும், 0452-2349868, 2344360 என்ற எண்ணிலும் புகார் அளிக்கலாம் என கோவில் நிர்வாகம் ெ்தரிவித்துள்ளது.

Next Story