மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு தள்ளிவைப்பு


மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 18 March 2022 3:21 AM IST (Updated: 18 March 2022 3:21 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு தள்ளிவைத்து உள்ளது.

சென்னை,

மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி கடந்த அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்தும், தங்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கக்கோரியும் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

பொது பிரிவினர்

அப்போது நீதிபதிகள், ‘‘தமிழகத்தில் ஏற்கனவே 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ளபோது எஞ்சிய 31 சதவீத இடஒதுக்கீட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், பொதுப்பிரிவில் உள்ள தகுதியான மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என மனுதாரர்கள் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளதே?’’ என்று கேள்வி எழுப்பினர்.

பின்னர். ‘‘இதுபோன்ற இடஒதுக்கீடுகளால் ஏற்கனவே பயன் அடைந்தவர்களின் குடும்பத்தினர்தான் மீண்டும், மீண்டும் பயன் பெறுகின்றனர். 70 ஆண்டுகளாகியும் பின்தங்கியவர்கள், பின்தங்கியவர்களாகவே உள்ளனர். இதை நாடாளுமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என்று கருத்து தெரிவித்தனர்.

பாதிப்பு இல்லை

இதற்கு தமிழ்நாடு அரசு, மாநில உயர் கல்வித்துறை சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள், கபில்சிபில், பி.வில்சன் ஆகியோர் விளக்கம் அளித்து வாதிட்டனர். அவர்கள் கூறியதாவது:-

பொதுப்பிரிவினருக்கான 31 சதவீத இடஒதுக்கீட்டில் இந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. மொத்தம் உள்ள மருத்துவ இடங்களில்தான் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதனால் தகுதியுள்ள பொதுப்பிரிவு மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது.

சமூக பொருளாதாரம் கட்டமைப்பு சமமற்ற நிலை என அனைத்து அம்சங்களையும் நன்றாக ஆராய்ந்து நீதிபதி குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலேயே இந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டு உள்ளது.

நியாயமானது

தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சிறப்பு பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி மேற்கொள்ள முடியும். ஆனால், அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை என்பதால்தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கான இந்த இடஒதுக்கீடு நியாயமானதுதான். அரசு, தனியார் பள்ளிகள் என இரு வகையாக பிரிப்பது சட்டப்படி அனுமதிக்கத்தக்கது. அதன் அடிப்படையில்தான் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

பாரபட்சம்

அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், ‘‘அரசு பள்ளி மாணவர்களின் நிலையை மட்டும் கருத்தில் கொண்டுள்ள தமிழக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை கவனத்தில் கொள்ள தவறிவிட்டது.

அரசு உதவி பெறும் பள்ளிகள் மாணவர்களிடம் எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுவதை போல இலவச சீருடை, காலணி, புத்தகங்கள் போன்றவை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. ஆனால் இந்த 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மட்டும் பாரபட்சம் காட்டப்பட்டு உள்ளது’’ என்றனர்.

தீர்ப்பு

அதற்கு நீதிபதிகள், ‘‘பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தமிழகத்தில் அமலில் உள்ளதா? என்பது குறித்து அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் விளக்கம் அளிக்க வேண்டும். அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தி இருந்தால் நீட் பயிற்சி மையங்களுக்கான தேவை ஏற்பட்டு இருக்காது’’ என்றும் கருத்து கூறினர்.

பின்னர் அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

Next Story