மாணவி லாவண்யா தற்கொலை; 3-ஆம் கட்ட விசாரணையை தொடங்கிய சிபிஐ..!
அரியலூர் மாணவி தற்கொலை தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் 3-ஆம் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.
பூதலூர்,
தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி லாவண்யா அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் .இவர் அந்த பள்ளியில் உள்ள தூய மைக்கேல் மாணவியர் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 19-ம் தேதி விஷம் குடித்து தஞ்சை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .
இதுகுறித்து மாணவி லாவண்யாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விடுதி வார்டன் சகாயமேரியை கைது செய்தனர். தற்போது விடுதி வார்டன் ஜாமீனில் உள்ளார் . தற்கொலை செய்து கொண்ட லாவண்யா தன்னை மதம் மாறச் சொல்லி வற்புறுத்தியதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே மாணவியின் தந்தை முருகானந்தம் வழக்கை தமிழக போலீசார் விசாரணையில் நியாயம் கிடைக்காது. வழக்கு விசாரணையை வேறு ஒரு அமைப்புக்கு மாற்றக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடுத்தார் .
மதுரை ஐகோர்ட்டு கிளை லாவண்யா தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட்டது. சி.பி.ஐ விசாரணையை எதிர்த்து தமிழக போலீஸ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு சி.பி.ஐ விசாரணை தொடர உத்தரவு வழங்கியது. இதனடிப்படையில் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி சி.பி.ஐ துணை இயக்குனர் வித்யா குல்கர்னி தலைமையிலான சி.பி.ஐ குழுவினர் மைக்கேல் பட்டி விடுதிக்கு வந்து விசாரணை மற்றும் ஆய்வு மேற்கொண்டனர்.
இதன் பின்னர் பிப்ரவரி 28-ம் தேதியில் இருந்து சி.பி.ஐ அதிகாரிகள் குழு மைக்கேல்பட்டி விடுதியில் பதிவேடுகள் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்தனர். 5 நாட்கள் நீடித்த இந்த விசாரணைக்கு பின்னர் சி.பி.ஐ விசாரணைக்குழு திரும்பியது.
தற்போது 3-வது கட்டமாக நேற்று மாலை சி.பி.ஐ அதிகாரிகள் குழு மைக்கேல்பட்டி வந்து பள்ளி மற்றும் விடுதியில் விசாரணை மேற்கொண்டது. அப்போது பள்ளி விடுதியின் பணியாளர்கள், பள்ளி தலைமையாசிரியர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்திவிட்டு மாலை திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story