பங்குனி உத்திர திருவிழா: திருச்செந்தூரில் குவிந்துள்ள பக்தர்கள்....!
பங்குனி உத்திர திருவிழா தமிழகத்தில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா இன்று நடைபெற்று வருகிறது. அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது, தொடர்ந்து 5.30 மணிக்கு வள்ளி அம்பாள் தபசுக்கு எழுந்தருளினார்.
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சுவாமியை தரிசிக்க நேற்று முதலே திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் திரண்ட வண்ணம் இருந்தது. இன்று திருவிழாவையொட்டி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலையிலேயே கடலில் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
இன்று மாலை 3.20 மணிக்கு மேல் சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி மேலக் கோவில் பந்தல் மண்டபம் முகப்பிற்கு செல்கிறார். அங்கு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
பின்னர் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார்கள். இரவு 10 மணிக்கு மேல் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கும், வள்ளியம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. இதையொட்டி வழக்கமாக இரவு 7 மணிக்கு நடைபெறும் ராக்கால அபிஷேகம் நடைபெறாது.
இதை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மின் வசதி மற்றும் பந்தல் வசதிகளும் கோவில் நிர்வாகம் மூலம் செய்யப்பட்டுள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர்(பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story