பஸ் ஓட்டிய போது டிரைவருக்கு மாரடைப்பு; பயணிகளை காப்பாற்றி உயிரிழந்த சோகம்...!


பஸ் ஓட்டிய போது டிரைவருக்கு மாரடைப்பு; பயணிகளை காப்பாற்றி உயிரிழந்த சோகம்...!
x
தினத்தந்தி 18 March 2022 3:45 PM IST (Updated: 18 March 2022 3:55 PM IST)
t-max-icont-min-icon

சென்னை அருகே பயணிகளின் உயிரை காப்பாற்றிவிட்டு அரசு பஸ் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொன்னேரி, 

சென்னை பொன்னேரி பேருந்து பணிமனையில் இருந்து பழவேற்காட்டிற்கு டி 28 என்ற எண் கொண்ட அரசு பஸ் இயக்கப்படுகிறது. 
இந்த பஸ்சை டிரைவர் கோலப்பன் என்பவர் ஓட்டி சென்றார். பொன்னேரியில் இருந்து நேற்று இரவு 10 மணிக்கு புறப்பட்டு பஸ் இரவு 11 மணியளவில் பழவேற்காட்டிற்கு சென்றது.

இரவு அங்கு தங்கிய டிரைவர் கோலப்பன் இன்று அதிகாலை 4 மணி அளவில் பழவேற்காட்டில் இருந்து பஸ்சை எடுத்துகொண்டு  பொன்னேரி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பாரதிநகர் என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டிருக்கும் போது கோலப்பனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் நிலை தடுமாறிய கோலப்பன் பஸ்யை சாமர்த்தியமாக சாலையோரம் நிறுத்தினார்

பின்னர் நெஞ்சை பிடித்தபடி வலியால் துடித்த டிரைவர் கோலப்பனை ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள்,இவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

குமரி மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் கோலப்பனுக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story