அ.தி.மு.க.வில் புதிய பதவிகள்: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


அ.தி.மு.க.வில் புதிய பதவிகள்: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 March 2022 2:41 AM IST (Updated: 19 March 2022 2:41 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க., சட்டவிதிகளுக்கு எதிராக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்க ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

ஜெயலலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பதவி நீக்கப்பட்டு, அதற்கு பதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.

இது அ.தி.மு.க.வின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக்கூறி கட்சி உறுப்பினர்கள் வக்கீல் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும், கடந்தாண்டு டிசம்பரில் நடத்தப்பட்ட உள்கட்சி தேர்தலையும் ரத்துசெய்ய வேண்டும்.

தடை

அ.தி.மு.க., கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது தவறு. மாற்றுக்கட்சிகளுக்கு செல்லாத 2016-ம் ஆண்டு அன்று 5 ஆண்டுகளாக கட்சியில் உறுப்பினர்களாக உள்ளவர்களைக் கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரித்து அதில் இருந்து ஒருவரை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க உத்தரவிட வேண்டும்.

பொதுச்செயலாளர் இல்லாமல் பொதுக்குழு மற்றும் செயற்குழுவைக் கூட்ட கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவர தடை விதிக்க வேண்டும். அத்துடன் இதுதொடர்பாக அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் கட்சி நிர்வாகிகளை எதிர்த்து வழக்கு தொடர அனுமதியளிக்க வேண்டும்.

இவ்வாறு கூறியிருந்தனர்.

பதில்

இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Next Story