கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற பட்டதாரி பெண் உள்பட 6 பேர் கைது


கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற பட்டதாரி பெண் உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 19 March 2022 2:48 AM IST (Updated: 19 March 2022 5:43 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் ‘வாட்ஸ்அப்’ குழு அமைத்து கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற 6 பேர் கும்பல் கைது செய்யப்பட்டது. பட்டதாரி பெண்ணும் பிடிபட்டார். இவர்களைப் பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை,

சென்னையில் போதை மாத்திரைகளை வெளிமாநிலங்களில் இருந்து கூரியர் மூலம் கடத்திவந்து விற்பனை செய்யும் பயங்கர கும்பல் செயல்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த கும்பல் போதை மாத்திரை என்று வலிநிவாரணி மாத்திரைகளை விற்பதாகவும் தெரியவந்தது. டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் இந்த மாத்திரைகளை விற்கக் கூடாது. ஆனால் இந்த கும்பல் சட்டவிரோதமாக இம்மாத்திரைகளை விற்பதாக, குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

போதை மாத்திரை பயன்படுத்தும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ‘வாட்ஸ்அப்’ குழு அமைத்து மாத்திரைகளை இந்த கும்பல் சப்ளை செய்வதாகவும் தெரியவந்தது. இவர்கள் பற்றிய முழு விவரங்களையும் போலீசார் ரகசியமாக சேகரித்தனர். இக்கும்பலைச் சேர்ந்தவர்களை கூண்டோடு கைது செய்ய கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு களத்தில் இறக்கப்பட்டது.

2 பேர் சிக்கினார்கள்

இந்த போதை மாத்திரை விற்பனை கும்பல், கோடம்பாக்கம் பகுதியை மையமாக கொண்டு செயல்படுவதும் தெரியவந்தது. எனவே கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் தனிப்படை போலீசார் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கு இடமாக வந்த 2 பேரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை போட்டனர்.

அந்தப் பைக்குள், அதிக போதை தரும் வலிநிவாரணி மாத்திரைகளான டைடல், நைட்ரவிட் போன்றவை ஏராளமாக இருந்தன. அந்த மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அசோக்நகரைச் சேர்ந்த கிஷோர் (வயது 23), கே.கே.நகரைச் சேர்ந்த கிஷோர்குமார் (20) ஆகிய அந்த இருவரும் கைதானார்கள். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் 4 பேர் கைது

அவர்கள் சொன்ன தகவலின் பேரில், சென்னை கொத்தவால்சாவடியைச் சேர்ந்த பூங்குன்றன் (26), ராஜபாளையத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி (23), தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைகுண்டைச் சேர்ந்த கோகுலன் (24), சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த ராஜலட்சுமி (22) ஆகிய மேலும் 4 பேர் கைதானார்கள்.

அவர்களிடம் இருந்து 4 ஆயிரத்து 620 நைட்ரவிட் மாத்திரைகள், 2 ஆயிரத்து 220 டைடல் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கருக்கலைப்புக்கு பயன்படும் மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டன.

பட்டதாரி பெண்

கைதான இந்த கும்பலிடம் இருந்து ரூ.4.41 லட்சம் ரொக்கப்பணம், 2 மடிக்கணினிகள், 9 செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைதான ராஜலட்சுமி பட்டதாரி ஆவார். இவர்தான் கல்லூரி மாணவர்களிடம் பழக்கத்தை ஏற்படுத்தி போதை மாத்திரைகளை விற்பதற்கு மூளையாக செயல்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்தக் கும்பலிடம் தொடர்ந்து விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story