வேளாண் துறை இயந்திரமயமாக்கப்படும் - பட்ஜெட்டில் தகவல்


வேளாண் துறை இயந்திரமயமாக்கப்படும் - பட்ஜெட்டில் தகவல்
x
தினத்தந்தி 19 March 2022 2:13 PM IST (Updated: 19 March 2022 2:13 PM IST)
t-max-icont-min-icon

வேளாண் துறை இயந்திரமயமாக்க வேண்டிய நிலைமை நீடிக்கின்றது என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்

சென்னை

வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்  இன்று வேளண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக அவர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

 வேளாண்மையை இயந்திரமயமாக்குதல்

வேளாண்மையில் ஈடுபடும் ஆள் பற்றாக்குறையைக் கருவிகள் கொண்டே நிரப்ப வேண்டிய நிலைமை நீடிக்கிறது. அறுப்பதற்கும், நடுவதற்கும், களையெடுப்பதற்கும், களமடிப்பதற்கும், கனி பறிப்பதற்கும் கருவிகள் வந்து விட்டன. உழவுத் துறையை இயந்திரமயமாக்குதல் தவிர்க்க முடியாத ஒன்று இன்று.

விவசாயிகள் தங்களுக்குத் தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள், கருவிகளை மானியத்தில் பெற்று, நிகர வருவாயை அதிகரிக்க, 2022-23 ஆம் ஆண்டில்

6,357 தனிப்பட்ட விவசாயிகளுக்கு அளிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் சிறிய வேளாண் இயந்திரங்கள், கருவிகளுக்கும், சிறு, குறு விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

மேலும், இளைஞர்களை விவசாய தொழிலில் ஈர்த்திட, விவசாயிகள், தொழில் முனைவோர்கள், பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் கிராம, வட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும். இவற்றில் கரும்பு சாகுபடிக்கேற்ற உயர்தொழில்நுட்ப வேளாண் இயந்திரங்கள், ட்ரோன்கள் உள்ளடங்கிய வாடகை மையங்கள் ஏற்படுத்தப்படும்.

இது தவிர, இயந்திரங்கள் வாங்க இயலாத சிறு, குறு விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் வேளாண் இயந்திரப்பணிகளுக்கு அதிகபட்சமாக ஏக்கருக்கு எண்ணூறு ரூபாய் வீதம் அதிகபட்சமாக ஐந்து ஏக்கர் வரை மானியம் வழங்கப்படும். இதன் மூலம் 62 ஆயிரம் ஏக்கரில் உள்ள சுமார் 37 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் பயனடையும் வகையில் 10 கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.

இத்திட்டத்திற்கு 2022-23 ஆம் ஆண்டில் 150 கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசினால் ஒதுக்கீடு செய்யப்படும்.

விவசாயக் கருவிகளை வாடகைக்கு வழங்கி, பெண் விவசாயிகள் பயன் பெறும் வகையில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 736 கருவி வங்கிகள் அமைக்கப்படும்.

முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டம்

மின் இணைப்பு இல்லாத விவசாயிகளின் கிணற்றுப்பாசனத்திற்கான மின்சாரத் தேவையினை பூர்த்தி செய்திடும் பொருட்டு, பசுமை ஆற்றலான சூரிய சக்தியை மின்சக்தியாக மாற்றி வேளாண்மையில் பயன்படுத்திட முதலமைச்சரின் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்கும் திட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டில் 10 குதிரைத்திறன் வரையிலான தனித்து சூரிய சக்தியால் இயங்கும் 3,000 பம்புசெட்டுகள் 70 சதவீத மானியத்தில் 65 கோடியே 34 இலட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதி உதவியுடன் அமைக்கப்படும்.

வேளாண் விளைபொருள் மதிப்புக் கூட்டும் இயந்திரங்களை மானியத்தில் வழங்குதல்

”கடுங்காற்று எறிய போகிய துரும்புடன் காயல் சிறுதடிக் கண்கெடப் பாய்தலின்” என்ற அகநானூற்றுப் பாடலில், உழவர்கள் நெல்லரிந்து, வைக்கோலில் இருந்து பிரித்தெடுத்து, தூற்றித் தூசு துரும்புகளை அகற்றி தூய்மை செய்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், இதர வேளாண் விளைபொருட்களை தரம் பிரித்து, மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தி அதிக இலாபம் பெறும் வகையில், 292 மதிப்புக் கூட்டும் இயந்திரங்களை விவசாயிகளுக்கு 40 சதவீத மானியத்தில் வழங்குவதற்கு 2022-23-ஆம் ஆண்டில் ஐந்து கோடி ரூபாய் ஒன்றிய, மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

சூரிய கூடார உலர்த்திகள் அமைத்தல்

“ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்” என்னும் வரிகள் மூலம் இளங்கோவடிகள் கதிரவனைச் சிறப்பித்துப் பாடுகிறார். ஞாயிறுக்கு இல்லை ஞாயிற்றுக்கிழமை என்பதே உண்மை.

சூரிய ஆற்றலின் வெப்ப பயன்பாட்டினைக் கொண்டு, வேளாண் விளை பொருட்களை சுகாதாரமாக, குறைந்த நேரத்தில், ஒரே சீரான முறையில் உலர்த்தி, அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்புகளைத் தவிர்த்து, அதன் சேமிப்பு காலத்தை அதிகரித்து, அதிக விலைக்கு விற்று, விவசாயிகளும், விவசாயக் குழுக்களும் அதிக இலாபம் பெற்றிடும் வகையில் பசுமைக் குடில் போன்ற 145 சூரிய கூடார உலர்த்திகளை 40 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் 2022-23 ஆம் நிதியாண்டில், மூன்று கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசு செலவில் செயல்படுத்தப்படும

வேளாண் இயந்திரங்கள், சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை பழுது நீக்கி பராமரிக்கும் மையங்கள்

”காலத்தே பழுதுநீக்கி உழவு செய்து விவசாயம் செழித்திட” என்பதற்கேற்ப விவசாயிகள் தங்கள் வேளாண் இயந்திரங்கள், கருவிகள், சூரிய சக்தி பம்புசெட்டுகள் போன்றவற்றை கால விரயமின்றி அவர்களின் இருப்பிடத்திலேயே பழுதுநீக்கிப் பராமரிக்கவும், வேளாண் பொறியியலில் பட்டயம் அல்லது பட்டம் பெற்ற இளைஞர்கள் மூலம் விவசாயிகளுக்கு உதவும் வகையில், 2022-23 ஆம் ஆண்டில் தலா 8 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 50 சதவீத மானியத்துடன் 25 வேளாண் இயந்திரங்கள், சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் ஆகியவற்றைப் பழுது நீக்கி பராமரிக்கும் மையங்கள் ஒரு கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும்.

மானியத்தில் மின்மோட்டார் பம்புசெட்டுகள்

மண்ணில் உண்டியல் போல சேமித்த மழைநீரை குழாய்க் கிணறு, ஆழ்துளைக் கிணறு, திறந்தவெளி கிணறு ஆகியவற்றிலிருந்து பாசனத்திற்கு இறைப்பதற்காக விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்கவும், திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்றி புதிய மின் மோட்டார் பம்புசெட்டுகள் பொருத்தவும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் 5,000 விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள் வாங்குவதற்கு ஒரு மின்மோட்டார் பம்பு செட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் மானியம் வீதம் மொத்தம் ஐந்து கோடி ரூபாய் 2022-23 ஆம் ஆண்டில் ஒன்றிய, மாநில அரசு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.

நீர் சேகரிப்புக் கட்டமைப்புகளைப் பராமரித்தல்

நீர் சேகரிப்புக் கட்டமைப்புகளின் வரத்துக் கால்வாய்களிலும் வெளிச்செல்லும் கால்வாய்களிலுமுள்ள புதர், செடி, கொடிகளை அழித்து அதன் நீரோட்டத்தை அதிகரித்து, தூர்வாரி ஆழப்படுத்தி அதன் கொள்ளளவை அதிகரிக்கும் நோக்கத்தில், வறட்சிக்கு இலக்காகும் பகுதிகள் திட்டம், ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டம், ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மைத் திட்டம் ஆகியவற்றின் கீழ் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மூலம் அமைக்கப்பட்ட ஆயிரத்து

500 நீர்சேகரிப்பு கட்டமைப்புகளில், 2022-23 ஆம் ஆண்டில் ஐந்து கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதி செலவில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

Next Story