சென்னை தீவுத்திடலில் மார்ச் 21-ல் நம்ம ஊரு திருவிழா
‘நம்ம ஊரு திருவிழாவை’ மிகச் சிறப்பான வகையில் நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை
தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
2021-2022 ஆம் நிதியாண்டில் தமிழகத்தினை சார்ந்த பாரம்பரியக் கலைகளின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் திரளான கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட நாட்டுப்புறக் கலைவிழாவினை சென்னையில் ஆண்டு தோறும் நடத்துவதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பண்பாட்டுக் கூறுகளை உணர்த்தும் நம் மண்ணின் நாட்டுப்புறக் கலை வடிவங்களைக் காட்சிப்படுத்தும் இவ்விழாவினை 21.03.2022 மாலை 6.00 மணிக்கு சென்னை தீவுத்திடலில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
‘நம்ம ஊரு திருவிழா’ கலைப் பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து, கோவிட்-19 நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு சென்னை தீவுத்திடலில் நடத்தப்படும். 21.03.2022 அன்று மாலை 6.00 மணியளவில் சென்னை தீவுத்திடலில் தமிழ் மண்ணின் கலைப் பண்பாட்டு பெருமைகளைப் பறைசாற்றும் நாட்டுப்புறக் கலை வடிவங்களின் சங்கமமாக, ‘நம்ம ஊரு திருவிழாவை’ மிகச் சிறப்பான வகையில் நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை அரசு இசைக்கல்லூரி மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கும். இதைத் தொடர்ந்து, ஆனந்தன் குழுவினரின் மங்கல இசை, திருவண்ணாமலை குமார் குழுவினரின் கட்டைக்கூத்து, மதுரை தட்சிணாமூர்த்தி குழுவினரின் கொம்பு இசை, திருவண்ணாமலை முனுசாமி குழுவினரின் பெரிய மேளம் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
உலகப் புகழ் பெற்ற டிரம்ஸ் இசைக்கலைஞர் சிவமணி பாரம்பரிய இசைக்கருவிகளின் இசையை ஒருங்கிணைப்பார். அவரின் வடிவமைப்பில் தென்காசி கண்ணன் மற்றும் இராமமூர்த்தி குழுவினரின் மகுடம், கோவை சாமிநாதன் குழுவினரின் துடும்பு மேளம், கிருஷ்ணகிரி மஞ்சுநாதன் குழுவினரின் பம்பை மேளம், இராமநாதபுரம் முருகன் குழுவினரின் நையாண்டிமேளம் ஆகிய நிகழ்ச்சிகளும் சேர்ந்து வித்தியாசமான இசைக் கலவையாக பார்வையாளர்களை பரவசப்படுத்தும்.
அடுத்து, கன்னியாகுமரி முத்துச்சந்திரன் குழுவினரின் தோல்பாவைக் கூத்து, மாஸ்டர் மகேந்திரன் மற்றும் சேலம் ஜெயம் நடராஜன் குழுவினரின் சிலம்பாட்டம், காஞ்சிபுரம் கோபால் மற்றும் திங்கள் அரசன் குழுவினரின் புலியாட்டம், கோவை சின்ன நடராஜ், பெரிய நடராஜ் குழுவினரின் காவடியாட்டம், திருவாரூர் சுர்ஜித் குழுவினரின் காவடியாட்டம், மதுரை கோவிந்தராஜ் குழுவினரின் மரக்காலாட்டம், முத்து முனியாண்டி குழுவினரின் தீ சாகசம் போன்ற சாகச கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த நிகழ்ச்சிகளின் இடையே நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் (Noise and Grains) குழுவின் நடனக் கலைஞர்களும் பங்கு பெறுவர்.
இவற்றின் தொடர்ச்சியாக திருவண்ணாமலை ராஜன் குழுவினரின் அம்மன் நிகழ்ச்சி, அலங்காநல்லூர் வேலு குழுவினரின் பறையாட்டம், சென்னை கார்த்திக் குழுவினரின் கரகாட்டம், காளையாட்டம், மயிலாட்டம், பன்னீர் ராஜன், தஞ்சை அமலா குழுவினரின் பொய்க்கால் குதிரையாட்டம், கரகம், மயில், காளையாட்டம், நெல்லை மணிகண்டன் குழுவினரின் தேவராட்டம், தர்மபுரி சாக்கன் குழுவினரின் சாட்டைக்குச்சி, பொள்ளாச்சி மகேந்திரன் குழுவினரின் ஜிக்காட்டம், ஊட்டி வாசமல்லி குழுவினரின் தோடர் நடனம், கரூர் சின்னதுரை குழுவினரின் சேர்வையாட்டம் போன்ற பலவிதமான நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள் அணிவகுக்கும். நம்ம ஊரு திருவிழாவின் நடன நிகழ்ச்சிகளைப் பிரபல நடன இயக்குநர் பிருந்தா வடிவமைத்துள்ளார்.
கலைநயமிக்க நடன நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, பார்வையாளர்களைக் கவரும் கானா பாலா குழுவினரின் கானா பாட்டு, வேல்முருகனின் தெம்மாங்கு பாட்டு, திருவண்ணாமலை ஜெயக்குமார் குழுவினரின் ஒப்பாரிப் பாட்டு, தஞ்சாவூர் சின்னப் பொண்ணு குமார் குழுவினர், கிடாக்குழி மாரியம்மா குழுவினர் மற்றும் அந்தோணிதாசனின் கிராமியப் பாடல்கள், நாகூர் அப்துல் கனி குழுவினரின் பக்கிரிஷா பாட்டு போன்ற நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
400-க்கும் மேற்பட்ட கலைஞர்களால் நிகழ்த்தப்பெறும் பல்வேறு நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளின் இனிய இணைப்பாக அமையும் இந்த பிரம்மாண்ட நாட்டுப்புறக் கலை விழாவை ஈரோடு மகேஷ், தோஷிலா ஆகியோர் தொகுத்து வழங்குவார்கள்.
தமிழகத்தின் நாட்டுப்புறக் கலை வடிவங்களைப் பெருமையோடு காட்சிப்படுத்தும் இந்த விழா குறித்த செய்தி அனைவரையும் சென்றடைய, விழா குறித்த விளம்பரங்கள்( பேஸ்புக் ,டுவிட்டர் ,வாட்ஸ் அப் ,யூடியூப் )போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரப்பப்படுகின்றன. பெருநகர சென்னை மாநகரின் முக்கிய இடங்களில் அகன்ற திரைகளில் (LED Screens) நம்ம ஊரு திருவிழா குறித்த விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.
இந்த விழா 75 வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும். தமிழகத்தின் நாட்டுப்புறக் கலை வடிவங்களின் 75 ஒளிப்படங்கள் தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்படுகின்றன. நாட்டுப்புறக் கலைகள் தொடர்பான சில ஒளிப்படங்களும், சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய ஊடகங்களின் வாயிலாக இவ்விழாவின் போது காட்சிப்படுத்தப்பட உள்ளது.
வேகமாக மாறிவரும் அறிவியல், நவீனமய வாழ்க்கைச் சூழலில் நம் தமிழ் மண்ணின் கலை பண்பாட்டு வேர்களை தமிழர்களுக்கு நினைவூட்டவும், இளம் தலைமுறையினருக்கு நம் பழமையான கலை வடிவங்களை அறிமுகப்படுத்தவும் பிரபலப்படுத்தவும், திறமை மிக்க நாட்டுப்புறக் கலைஞர்களை பெருமைப்படுத்தவும் தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகளையும், முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வருகிறது.
தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை உணர்த்தும் பிரம்மாண்டமான இந்த நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியை சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடையில் 21.03.2022 அன்று மாலை 6.00 மணியளவில் மாண்புமிகு தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்களும், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் அவர்களும் துவக்கி வைப்பார்கள்.
பொதுமக்களும், கலை ஆர்வலர்களும் பெரும் எண்ணிக்கையில் வருகை தந்து நம்ம ஊரு திருவிழாவில் நிகழ்த்தப்பட இருக்கும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை கண்டு களிக்குமாறும், கலைஞர்களை ஊக்கப்படுத்துமாறும் அன்புடன் அழைக்கிறோம் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story