“கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சி விசாரணை நடத்த உத்தரவிட முடியாது” - ஐகோர்ட் கருத்து
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சி விசாரணை நடத்த உத்தரவிட முடியாது சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான எஸ்டேட், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாட்டில் உள்ளது. இந்த எஸ்டேட்டில் உள்ள பங்களாவில், கடந்த 24-4-2017 அன்று கொள்ளை சம்பவம் நடந்தது. அப்போது சில பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவத்தின்போது அங்கு காவலாளியாக இருந்த ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார். கொள்ளையர்கள் தாக்கியதில், மற்றொரு காவலாளியான கிருஷ்ணதாபா படுகாயம் அடைந்தார்.
இது தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் பல சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படவில்லை என சயான் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீலகிரி கோர்ட்டு, இந்த வழக்கு தொடர்பாக மேல்விசாரணை நடத்த அனுமதி அளித்து போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த தீபு என்பவர், நீலகிரி கோர்ட்டில் சாட்சி விசாரணையை தொடங்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆஜராகி, இந்த வழக்கில் மேல்விசாரணை நடத்தப்பட்டுவரும் நிலையில், சாட்சி விசாரணையை தொடங்கினால் வழக்கின் போக்கு மாறிவிடும் என்பதால் சாட்சி விசாரணையை தொடங்க அனுமதிக்கக் கூடாது என வாதிட்டார்.
அதே சமயம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி ஆகியோரை சாட்சியாக சேர்க்க திட்டமிட்டுள்ளதால், அவர்கள் இந்த மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த வாதங்களை கேட்டுக் கொண்ட நீதிபதி, தற்போதைய சூழலில் இந்த வழக்கில் மேல்விசாரணை நடந்து வருவதால், சாட்சி விசாரணை நடத்த உத்தரவிட முடியாது எனக்கூறி, இந்த வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
Related Tags :
Next Story