வேளாண் பட்ஜெட்டில் இலவச மின்சாரத்துக்கு ரூ.5,157 கோடி ஒதுக்கீடு
தமிழக வேளாண் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.195 உதவித்தொகை, சிறுதானிய உற்பத்திக்கு புதிதாக 2 மண்டலங்கள் அமைப்பதோடு, இலவச மின்சாரத்துக்கு ரூ.5,157 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் போன்ற பல புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தில் கடந்த ஆண்டு (2021) தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், வேளாண்மைக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
வேளாண் பட்ஜெட் தாக்கல்
அதன்படி, பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அடுத்தநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த2 பட்ஜெட்டுகளும் இடைக்கால பட்ஜெட் ஆகும்.
இந்த நிலையில், 2022- 2023-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் நேற்று முன்தினம் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கலானது.
வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் புதிய அறிவிப்புகள் பல இடம்பெற்றுள்ளன.
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.195
* உயர் மதிப்பு வேளாண் திட்டங்களில், ஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பை சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு அவர்களின் பங்குத்தொகையை குறைத்து உதவிடும் வகையில், நடைமுறையில் உள்ள மானியத்துடன், 20 சதவீத கூடுதல் மானியம் மாநில அரசு நிதியில் இருந்து வழங்கப்படும். இதற்காக இந்த ஆண்டு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* கரும்பு விவசாயிகளின் நலனை காக்கும் வகையில், சென்ற ஆண்டை போலவே, 2021-2022 அரவை பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கும் தகுதியுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.195 வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர்.
2 சிறுதானியசிறப்பு மண்டலங்கள்
* ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை, 2023-ம் ஆண்டை “சர்வதேச சிறுதானிய ஆண்டாக” அறிவித்துள்ளது. சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், “2 சிறுதானிய சிறப்பு மண்டலங்கள்” திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களை கொண்டும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருச்சி, கரூர், திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை கொண்டும் உருவாக்கப்படும்.
சிறுதானிய ஊட்டச்சத்துகள் பற்றிய முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், “சிறுதானிய திருவிழா” மாநில, மாவட்ட அளவில் நடத்தப்படும். சாகுபடி முதல் மதிப்பு கூட்டி விற்பனை செய்வது வரை அனைத்து உதவிகளையும் ஒருசேர வழங்கிடும் வகையில், இந்த நிதியாண்டில் ரூ.92 கோடி மத்திய, மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இலவச மின்சாரத்துக்கு ரூ.5,157 கோடி
* வேளாண் உற்பத்தியில் நிலத்தடி நீரின் பயன்பாடு பெருமளவு உள்ளதால், தமிழ்நாட்டில் பாசனம் மேற்கொள்ள தேவையான மின்சாரம் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டது. 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மின் மோட்டார்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், 2021-2022-ம் ஆண்டில் மேலும் ஒரு லட்சம் புதிய மின்சார இணைப்புகள் வழங்க அறிவிக்கப்பட்டு இதுவரை 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணைப்புகள் வழங்கப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டில் உள்ளன.
விவசாயிகளுக்கு, இலவச மின்சாரம் வழங்குவதற்கென, இந்த ஆண்டு 5,157 கோடியே 56 லட்சம் ரூபாய் தமிழ்நாடு மின் உற்பத்தி-மின் பகிர்மானக் கழகத்திற்கு வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் வழங்கப்படும்.
பயிர் காப்பீடுக்கு ரூ.2,339 கோடி
* பயிர் காப்பீடு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக, காப்பீட்டு கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்களிப்பாக ரூ.2 ஆயிரத்து 339 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* அறுவடை செய்த விளைபொருட்களை இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாப்பதற்கும், உலர் களமாக பயன்படுத்துவதற்கும் 60 ஆயிரம் விவசாயிகளுக்கு தார்பாய்கள் ரூ.5 கோடி மானியத்தில் வழங்கப்படும்.
* தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுப்பதற்காக, நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்பட்டு 2022-2023-ம் ஆண்டில் அரசு விதை பண்ணைகளில் 200 ஏக்கரில் விதை உற்பத்தி செய்யப்பட்டு, சுமார் 20 ஆயிரம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வினியோகிக்கப்படும். இதற்காக ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
66 ஆயிரம் ஏக்கரில் மாற்றுப்பயிர் சாகுபடி
* நெல் பயிருக்கு மாற்றாக சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துப்பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் 66 ஆயிரம் ஏக்கரில் மாற்றுப்பயிர் சாகுபடி ரூ.10 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
* நெல் அறுவடைக்குப்பின், பயறு வகைகள் சாகுபடியை ஊக்கப்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
வேளாண் கடன் உதவி
* தேசிய வேளாண்மை - ஊரக மேம்பாட்டு வங்கி தனது 2022-2023-ம் ஆண்டிற்கான திறன் சார்ந்த கடன் திட்டத்தில் வேளாண் கடனாக ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 425 கோடி ரூபாய் வழங்கும் வகையில் விரிவான திட்டம் தயாரித்துள்ளது.
2022-2023-ம் ஆண்டில், மாவட்ட வாரியான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாயிகளுக்கு தேவையான கடன் உரிய காலத்தில் கிடைப்பதை, தமிழ்நாடு அரசு மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் தொடர்ந்து கண்காணிக்கும்.
* பட்டு விவசாயிகளின் நலனுக்காகவும், விவசாயிகளையும் தொழில் முனைவோர்களையும் பட்டுத்தொழிலில் ஈடுபட ஊக்குவிக்கும் வகையில், 2022-2023-ம் ஆண்டில் நீடித்த வேளாண்மைக்கான தேசிய இயக்கம் - மானாவாரி பகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 625 ஏக்கரில் மரமல் பெரியும், 500 எண்ணிக்கையில் மண்புழு உரக் கூடங்களும் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
சாலை பணிகள்
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் 2022-2023-ம் ஆண்டில், தடுப்பணைகள், பண்ணை குட்டைகள், மண் வரப்புகள், கல் வரப்புகள் ஆகிய இயற்கை வள மேலாண்மை அமைப்புகளும், தனி நபர் கிணறுகள், சமுதாயக்கிணறுகள், பால் சேகரிப்பு மையங்கள், உணவு தானிய சேமிப்பு கிடங்குகள், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான பணிக்குடில்கள் ஆகிய 19 ஆயிரத்து 800 பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
* 388 ஊரக சந்தைகளுக்கு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதோடு, 7 ஆயிரத்து 760 பயனாளிகளுக்கு தோட்டக்கலை பயிர்கள் சாகுபடிக்கான உதவியும் அளிக்கப்படும். இதற்கென மொத்தம் 1,245 கோடியே 65 லட்சம் ரூபாய் மத்திய, மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* விவசாயிகளின் இடுபொருட்களை விவசாய நிலங்களுக்கு எடுத்துச்செல்லவும், விளைந்த விளைபொருட்களை சந்தைக்கு எடுத்துச்செல்லவும் ஏதுவாக, 2022-2023-ம் ஆண்டில் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில், மொத்தம் 2,750 கிலோ மீட்டர் நீளமுள்ள ஓரடுக்கு கப்பி சாலைப்பணிகள் 604 கோடியே 73 லட்சம் ரூபாய் நிதியில் மேற்கொள்ளப்படும்.
பருவமழைக்கு முன் தூர்வாரும் பணி
* காவிரி டெல்டா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன் வாய்க்கால்களில் அவ்வப்போது தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. 2022-ம் ஆண்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 4,964 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய்களிலும், வாய்க்கால்களிலும் தூர் வாருவதற்கு 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 683 தூர் வாரும் சிறப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
விதை நெல் தொகுப்பு
வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தபோது, அவரது இருக்கைக்கு முன்னால் உள்ள மேஜையில், பல்வேறு வகையான விதை நெல்கள் அடங்கிய தொகுப்பு கூடை வைக்கப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனி வேல் தியாகராஜன் 1 மணி நேரம் 50 நிமிடங்கள் பேசினார். நேற்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் அதேபோல், 1 மணி நேரம் 50 நிமிடங்கள் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story